நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 8 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
ஜூலை 17ஆம் தேதி நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு 497 நகரங்களில் நடைபெற்றது. இந்த நுழைவு தேர்வுக்கு மொத்தம் 18,72,343 பேர் விண்ணபித்திருந்த நிலையில் 17,78,725 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன்பு மாணவ மாணவிகளிடம் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்ன சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இப்படியிருக்கும் நிலையில் டெல்லி மற்றும் ஹரியானாவில் நீட் தேர்வின் போது ஆள்மாறாட்டம் செய்தது அம்பலமாகியுள்ளது. இவ்வளவு சோதனைக்கு மத்தியிலும் ஆள்மாறாட்டம் நடைபெறுவது, தேர்வு மைய அதிகாரிகளும் இதற்கு உடந்தை என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்த எஃப்.ஐ.ஆரில் 12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட டெல்லி கவுதம் வீகாரை சேர்ந்த சுஷில் ரஞ்சன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 பேரை சிபிஐ தேடி வருகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் புகைப்படங்களுக்கு பதிலாக போலி தேர்வர்களின் புகைப்படங்கள் மார்ஃபிங் செய்து தேர்வு எழுதியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஆள்மாறாட்டத்திற்கு நீட் பயிற்சி மையத்தின் சில ஆசிரியர்களும் உடந்தையாக இருந்துள்ளனர், இதற்காக பல லட்சம் ரூபாய் கைமாறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நீட் தேர்விற்கான கேள்வித்தாளை ஏற்கனவே அறிந்து கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா ? என்றும் சிபிஐ விசாரணை நடத்திவருகிறது.
இதுபோன்று ஆள்மாறாட்டம் நடைபெறுவது முதன்முறை அல்ல. நீட் தேர்வு அறிமுகப்படுத்திய ஆண்டு முதலே இதுபோன்று பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா