நீட் ஆள்மாறாட்ட வழக்கு : ஒன்றிய அரசின் மீது நீதிபதி அதிருப்தி!

தமிழகம்

”மாணவிகளின் நகைகளைக் கழற்றி ஆராயும் நீங்கள், போலியாக தேர்வு எழுதிய மாணவர்களை ஏன் கண்டுபிடிக்கவில்லை?”  என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புகழேந்தி மத்திய அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது உறுதியான நிலையில், இதில் மாணவர் உதித் சூர்யா உட்பட 27 பேரை குற்றவாளிகளாக சேர்த்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் 27 ஆவது குற்றவாளியாக உள்ள தருண்மோகன் என்பவர் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கினை நீதிபதி புகழேந்தி விசாரித்து வருகிறார். கடந்த 9ஆம் தேதி நடந்த வழக்கு விசாரணையில், “இந்தியாவில் இல்லாத ஒரு மாணவர், 3 மாநிலங்களில் தேர்வு எழுதி, அதில் அதிக மதிப்பெண்கள் பெற்று அரசு மருத்துவக்கல்லூரியில் இடம்பெற்றிருந்தார்” என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆள்மாறாட்டம் தொடர்பான புகாருக்கு உரிய விளக்கம் அளிக்கும்படி தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (ஜூலை 16) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆள்மாறாட்டம் தொடர்பான புகார் வழக்கில் கடந்த ஆண்டே போதிய தகவல்களை சிபிசிஐடி போலீசாருக்கு வழங்கியுள்ளோம். கூடுதல் தகவல்கள் வழங்கவும் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வு முறைகேடு குறித்து ஊடகங்களில் அதிக செய்திகள் வருவதால் பிரச்சனைகள் அதிகமாகிறது” என கையில் இருந்த செய்தித்தாளை எடுத்துக்காட்டி வாதிட்டார்.

அதற்கு நீதிபதி புகழேந்தி, “ஊடகங்கள் சரியாகவே செய்தி வெளியிடுகின்றன. மாணவிகளின் அனைத்து அணிகலன்களையும் கழற்றி நீங்கள் சோதனை செய்கிறீர்கள். ஆனால் இந்தியாவில் இல்லாத மாணவர் 3 மாநிலங்களில் தேர்வு எழுதியுள்ளார். ஆதார் மற்றும் கைரேகை விவரங்களை அளித்து தான் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அப்படியிருக்கும் போலி தேர்வர்களை ஏன் நீங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ’5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நீட் தேர்வில் தீவிரமான குற்றச் சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இதுவரை சிபிசிஐடி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கு விசாரணையில் திருப்தி இல்லை. எனவே விசாரணையை அதிகாரியை மாற்ற வேண்டும்’ என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் கேட்கும் ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வரும் 19ம் தேதிக்குள் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி புகழேந்தி ஒத்திவைத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி பேரணி : பா.ரஞ்சித் அறிவிப்பு!

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர். மகாதேவன் நியமனம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *