அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் நவம்பர் 20 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜெ.இ.இ உள்ளிட்ட தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் நடத்தப்படுகிறது.
மேலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவற்றின் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 1500 அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளனர்.
அதன்படி நடப்பு கல்வியாண்டில் போட்டித்தேர்வு பயிற்சி குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில்,
போட்டித் தேர்வுகளுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் மூன்றாம் வாரத்திலிருந்து சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒன்றியங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (ஒன்றியத்திற்கு ஒரு மையம்) என 412 பயிற்சி மையங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் பயிற்று மொழி தேவைக்கேற்ப தமிழ் அல்லது ஆங்கிலம் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
போட்டித் தேர்விற்குப் பயிற்சி பெற விரும்பும் 12 ம் வகுப்பு மாணவர்கள் 11ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும்,
(அதிகபட்சம்-50 மாணவர்கள் ஒரு ஒன்றியத்திற்கு), 11 ஆம் வகுப்பு மாணவர்கள், 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும்,
(ஒரு ஒன்றியத்திற்கு அதிகபட்சம் 20 மாணவர்கள்) தேர்வு செய்யப்படவேண்டும்
OC/OBC – பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு 60% மதிப்பெண்களும், SC/ST/PH பிரிவில் 50% மதிப்பெண்களாகக் கொண்டு 12ம் வகுப்பில் 50 மாணவர்களும்,
11ம் வகுப்பில் 20 மாணவர்களும் தேர்வு செய்து அம்மாணவர்களின் விவரங்களையும், பயிற்சி மைய பொறுப்பாளர்களின் விவரங்களயும் படிவத்தில் பூர்த்தி செய்து idhssed@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.11.2022க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், இது நேரடி பயிற்சி வகுப்புகளாக நடைபெறுமெனவும், 2018-20 வரை 3 கல்வியாண்டுகளில் மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற பாட ஆசிரியர்கள்,
ஒன்றிய அளவில் பயிற்சி பெற்ற பாட ஆசிரியர்கள் மைய ஒருங்கிணைப்பாளராக இருக்க வேண்டுமெனவும் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா