நீட் தொடர்பான வழக்கை நீண்ட காலம் நிலுவையில் வைக்க உச்ச நீதிமன்றம் ஒன்றும் கிடங்கு அல்ல என்று நீதிபதிகள் தமிழக அரசிடம் காட்டமாக பேசியிருக்கின்றனர்.
நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2017, 2018ம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சில் சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இதனால் தமிழகத்தில் ஏழை, எளிய அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதி அஜய் ரஸ்தோஹி அமர்வு விசாரித்து வருகிறது.
இன்று(ஜனவரி 3) நடைபெற்ற விசாரணையில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, தமிழக அரசின் நீட் மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் பரீசிலனையில் இருப்பதை சுட்டிக்காட்டி, ரிட் மனு மீதான விசாரணையை ஆறு மாதத்திற்கு தள்ளி வைக்குமாறு கோரிக்கை வைத்தார்.
அப்போது நீதிபதிகள், இதுபோன்ற ரிட் மனுவை நீண்ட காலம் கிடப்பில் வைக்க முடியாது என்றும், அதற்கு உச்ச நீதிமன்றம் ஒன்றும் கிடங்கு அல்ல என்றும் தெரிவித்தனர்.
நீட் தொடர்பாக மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நெடுநாள் கிடப்பில் உள்ளது நீட் சட்டத்துக்கு எதிராக கேள்வி எழுப்பக்கூடாது என்பதையே காட்டுகிறது.
நீட் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் இருக்கிறது என்பதே, மசோதாவின் அடிப்படை தன்மை குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்பது உங்களுக்கு புரியவில்லையா?
ஆளுநர், குடியரசுத் தலைவரை காட்டி மீண்டும் அவகாசம் கோரினால், உச்சநீதிமன்றம் இதில் தலையிட முடியாது, மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசின் மனு மீதான விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
கலை.ரா
Comments are closed.