சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் மாட்டுக்கறி உணவு வகைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்பில் நடைபெறும் உணவு திருவிழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், டிசம்பர் 20-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
உணவு திருவிழாவில், 65 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மகளிர் மூலம் 35 உணவு அரங்குகள் அமைக்கப்பட்டு, கோவை கொங்கு மட்டன் பிரியாணி, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், திருப்பூர் முட்டை ஊத்தாப்பம் என 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தநிலையில், உணவு திருவிழாவில் மாட்டிறைச்சி உணவு எதையும் தயார் செய்யாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் சமூக வலைதளங்களில் பலரும் கண்டன குரல்கள் எழுப்பி வருகின்றனர்.

இதுதொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டுமையம் வன்மையாகக் கண்டிக்கிறது. உணவு_எங்கள் உரிமை” என்று தெரிவித்துள்ளது.
எழுத்தாளர் ஷாலின் மரிய லாரன்ஸ், “இந்த முறையும் தமிழக அரசு சார்பாக மெரினா கடற்கரையில் நடக்கும் உணவு திருவிழாவில் மாட்டுக்கறி பண்டங்கள் தவிர்க்க பட்டு இருக்கின்றன .
தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு பயணித்து இருக்கிறேன் . மாட்டுக்கறி சாப்பிடாத ஊர் என்று ஒன்றை கண்டது கிடையாது.
இன்னும் சொல்லப்போனால் சென்னை உட்பட பல மாவட்டங்களில் பன்றி இறைச்சி மிக பிரசித்தம். ஆனாலும் அதுவும் இல்லை.
இதில் இருந்து தமிழக அரசு உணவில் தீண்டாமையை கடை பிடிப்பதை உணர முடிகிறது. அரசு நடத்தும் நிகழ்வுகளில் தான் சாதிய பார்வை ,உணவு சார்ந்த தீண்டாமை பழக்கங்கள் ஒழிப்பதை இயல்பாக முன்னெடுக்க முடியும். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான அரசு பார்ப்பனிய மனநிலையில் இருப்பதை நன்றாக காண முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற உணவு திருவிழாவில் பீப் உணவுகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பீப் பிரியாணி கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Comments are closed.