கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகேயுள்ள கிங்ஸ்லி மெட்ரிக் பள்ளியில் சமீபத்தில் என்.சி.சி., முகாம் நடந்தது. முகாமில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியிலுள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். கடந்த 9ஆம் தேதி கலையரங்கில் முகாமில் பங்கேற்ற 8 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.
அதிகாலை நேரத்தில், அங்கு வந்த தேசிய மாணவர் படையின் பயிற்றுனர் சிவராமன் என்பவர் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர், வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இதே போன்று 4 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியின் முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார். அப்போது பள்ளியின் முதல்வர் சதீஸ்குமார் அந்த சிறுமியிடம் இந்த சம்பவத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் பெற்றோர்கள் வேதனை அடைவார்கள் என்றும் கூறி நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளார். வீடு திரும்பிய சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
பயந்து போன சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்தும் தனது பெற்றோரிடம் கதறியபடி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமியைச் சிகிச்சைக்காக அனுமதித்து, பரிசோதனை செய்தபோது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில் என்.சி.சி. பயிற்சியாளர் சிவராமன், பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர், பள்ளியின் முதல்வர் சதீஸ் குமார், ஆசிரியர் ஜெனிஃபர், தாளாளர் சாந்தன் என்.சி.சி பயிற்றுநர்களான இந்து, சக்திவேல், சத்யா, சுப்பிரமணி ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த சிவராமன் தலைமறைவாகி விட்டார். கோவையில் பதுங்கியிருந்த சிவராமனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்த சிவராமன் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தார். பாலியல் வழக்கில் சிக்கிய நிலையில் சிவராமன் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
சிவராமன் பல்வேறு பள்ளிகளில் மாணவிகளுக்கு ஏற்கனவே பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சிவராமன் எப்படி என்.சி.சி. பயிற்றுனராக நியமிக்கப்பட்டார் என்கிற கேள்விதான் இங்கு எழுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஒரே விபத்தில் குடும்பத்தை இழந்து தனிமரம்… பிரம்மை பிடித்த நிலையில் தமிழ் சிறுவன்!