நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றது தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில் விசாரணை துவங்கியது.
கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடியான நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி, தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் வரமாக கிடைத்திருப்பதாக புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர்.
திருமணமாகி 4மாதங்களே ஆன நிலையில் அவர்கள் வாடகைத்தாய் மூலம் தான் குழந்தை பெற்றிருக்கவேண்டும் என்று சந்தேகம் எழுந்தது.
வாடகைத்தாய் சட்டப்படி திருமணமாகி 5ஆண்டுகள் ஆகியிருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல விதிமுறைகள் உள்ளன.
அவற்றை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி முறையாக பின்பற்றினார்களா என்பதை விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில் 3பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது? அந்த வாடகைத்தாய் தமிழகத்தில் தான் சிகிச்சை பெற்றாரா எனவும், தமிழக மருத்துவமனை என்றால் உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
மருத்துவமனையின் விசாரணை முடிந்த பிறகு தேவைப்பட்டால் நயன்தாரா – விக்னேஷ் சிவனிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக வாடகைதாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகள் மருத்துவமனைகளில் பதிவு செய்வது கட்டாயம். அதுதொடர்பான விவரங்கள் சுகாதாரத் துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு வழங்கப்பட்ட தகவலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் பெயர் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெறவுள்ளது.
விசாரணை முடிந்தவுடன் இணை இயக்குனர் தலைமையிலான குழு டிஎம்எஸ் இயக்குனரிடம் அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். அதன் பின் அரசுக்கு அந்த அறிக்கை வழங்கப்பட்டு, விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
உதயநிதி போராட்டம் : அண்ணாமலை பதில்!
தமிழில் வெளியாகும் வேறு மொழி படங்களின் லிஸ்ட்!