நயினார் நாகேந்திரன் மகனின் ரூ.100 கோடி பத்திரப்பதிவு ரத்து!
பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு இன்று (ஜூலை 20) ரத்து செய்யப்பட்டுள்ளது.
நயினார் நாகேந்திரன் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜி சென்னை, விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை முறைகேடாக தனது பெயரில் பதிவு செய்ய முயன்றதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மகன் ஸ்ரீநயினார் பாலாஜி, மோசடியாகப் பதியப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மோசடி பத்திரப்பதிவு புகார் விசாரிக்கப்பட்டு உறுதியான நிலையில் , ராதாபுரம் மண்டல துணை பத்திரப்பதிவு துறை தலைவர் அதிரடியாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், இந்த உத்தரவை அறப்போர் இயக்கம் இன்று (ஜூலை 20) வரவேற்று சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது .
அதில்,”பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி, இளையராஜா என்னும் நபர் மற்றும் ராதாபுரம் சார்பதிவாளர் சேர்ந்து கூட்டு சதி செய்து,
சென்னை விருகம்பாக்கம் 100 கோடி மதிப்பிலான நிலத்தை திருநெல்வேலி ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த ஒப்பந்த பத்திரப்பதிவு மோசடி ஆவணம் என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு ஆணையிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 2022 இல் நடைபெற்ற மோசடி ஒப்பந்த பத்திரப்பதிவு குறித்து அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் ஏப்ரல் 2023 இல் தலைமைச் செயலர், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர், பத்திரப்பதிவுத்துறை செயலர்கள் மற்றும் சென்னை காவல் துறை ஆணையர் என அனைவருக்கும் புகார் அனுப்பியிருந்தது.
அதன் மீது விசாரணை மேற்கொண்ட திருநெல்வேலி துணை பத்திர பதிவுத்துறை தலைவர் இது மோசடி ஆவணம் என்பதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
தற்பொழுது பத்திர பதிவுத்துறையால் இது மோசடி ஆவணம் என்று ஆணையிட்டு இந்த ஒப்பந்த பத்திரப்பதிவை ரத்தும் செய்துள்ளது.
அடுத்தபடியாக மோசடி ஆவணம் பதிவு செய்தவர்கள் மீது FIR பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்ற கோரிக்கையையும் வைத்துள்ளது அறப்போர் இயக்கம்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மணிப்பூரில் கொடூரம்: நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட பெண்கள்!
’சட்டை கூட கசங்காமல் வெளியே வந்துள்ளேன்’- கனல் கண்ணன்