பாலியல் குற்றச்சாட்டு- கலாஷேத்ரா பேராசிரியர்களுக்கு அனுமதி மறுப்பு: மகளிர் ஆணையம்

பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான மூன்று பேராசிரியர்களை கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று இயக்குநர் ரேவதியிடம் வலியுறுத்தியதாக மகளிர் ஆணைய தலைவி குமாரி தெரிவித்துள்ளார்.

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு நான்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் இன்று கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மாநில மகளிர் ஆணையத்தில் இன்று (ஏப்ரல் 3) விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் 45 நிமிடங்கள் மகளிர் ஆணைய தலைவி குமாரி விசாரணை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் குமாரி பேசும்போது, “கலாஷேத்திராவிற்கு நான் மார்ச் 31-ஆம் தேதி விசாரணைக்கு சென்ற போது நிர்வாகிகள் யாரும் இல்லாததால் அவர்களை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு மகளிர் ஆணையத்திற்கு விசாரணைக்காக வர சொன்னேன்.

அதன்படி கல்லூரியில் ஐசிசி (Internal Complaint Committee) கமிட்டி எப்படி இயங்குகிறது. அதில் யாரெல்லாம் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது குறித்து இயக்குநர் ரேவதியிடம் கேட்டேன். மாணவிகளுக்கு 12-ஆம் தேதி வரை தேர்வுகள் இருப்பதால் பாதுகாப்பான சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டிய நான்கு பேராசிரியர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற மூன்று பேரையும் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று கேட்டுக்கொண்டேன். கல்லூரி மாணவிகள் மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள். அவர்களிடம் நான் மீண்டும் பேச போகிறேன்.

மாணவிகள் யாரும் எங்களிடம் புகார் தெரிவிக்கவில்லை என்று ரேவதி கூறினார். ஐசிசி கமிட்டியில் கடந்த பத்து ஆண்டுகளில் வந்த புகார்கள் அனைத்தையும் நான் கேட்டுள்ளேன். விசாரணை குறித்து எதுவும் கூறமுடியாது. இன்று அல்லது நாளை அரசிடம் இதுகுறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளேன்” என்றார்.

செல்வம்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts