தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: பெட்ரோல் குண்டு வீசுபவர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை!

தமிழகம்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் கடந்த இரு நாட்களாகத் தமிழகத்தில் அதிகளவு அரங்கேறி வரும் நிலையில், பொது அமைதியைக் கெடுப்பவர்கள் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று டிஜிபி எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது.

அன்றைய தினம் இரவு கோவை பாஜக அலுவலகம் உட்பட பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திண்டுக்கல், தாம்பரம் என பல பகுதிகளிலும் அடையாளம் தெரியாத நபர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டவும், சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று (செப்டம்பர் 25) ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 25) தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கோவை விரைந்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் செப்டம்பர் 22ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் இந்த சோதனையின் போது 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1410 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

National Security Act DGP warns

வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் தஞ்சாவூரில் பஸ் மீது கல்வீசி சேதம் விளைவித்த அரித்திரி சலிம் சிராஜுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடுகள் வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களைக் குறிவைத்து வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

சம்பவங்கள் தொடர்பாகக் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுபோன்று செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இது தவிர 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 100 நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாநகரில் அதிவிரைவுப் படையின் இரண்டு பிரிவுகள், மாநில கமண்டோ படை இரண்டு பிரிவுகள், சிறப்பு அதிரடி படை இரண்டு பிரிவுகள் என கூடுதலாக 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காவல்துறை கூடுதல் இயக்குநர் தாமரைக்கண்ணன் கோவையில் முகாமிட்டுள்ளார்.

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்” என்று எச்சரித்துள்ளார்.

பிரியா

ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார்?

சிம்புவுக்கு சொகுசு கார் வழங்கி அசத்திய ஐசரி கணேஷ்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

1 thought on “தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: பெட்ரோல் குண்டு வீசுபவர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை!

  1. உண்மையான குற்றவாளி தண்டிக்க வேண்டும், சந்தேக பேரில் கைது செய்து அடைப்பது நியாமா? மக்கள அட்சுர்பவர்களை வெளியே சுற்றுகிறார்கள் அவர்கள் மீது எப்போ நடவடிக்கை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *