துப்பாக்கிச் சுடுதலில் சிறந்த போலீசாரை தேர்ந்தெடுக்க வரும் ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் அகில இந்திய அளவில் போட்டி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைத் தமிழக போலீஸ் அகாடமி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி மேற்கொண்டுள்ளார்.
வண்டலூர் அருகே ஊமனாஞ்சேரியில் சுமார் 130 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழகக் காவல்துறை அகாடமி அமைந்துள்ளது. இங்கு வரும் ஜனவரி 9 ஆம் தேதி இந்திய அளவில் நடைபெறும் துப்பாக்கிச் சுடும் போட்டியில் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து வரும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
கூடுதலாகத் தேசியப் பாதுகாப்புப் படையினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர், அசாம் ரைபில் பிரிவினர் என மொத்தம் 33 குழுக்கள் போட்டியிடுகின்றன.. ஒரு குழுவுக்கு 20 பேர் என மொத்தம் 660 பேர் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் ஐபிஎஸ் அதிகாரிகள் வரையில் கலந்துகொள்கின்றனர்.
ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இப்போட்டியில் பங்கேற்க நாளை (ஜனவரி 6) முதலே பிற மாநிலங்களிலிருந்து போலீசார் சென்னைக்கு வரவுள்ளனர்.
அப்படி வருகைத் தரும் வீரர்களைச் சிறப்பாகக் கவனித்துக்கொள்ள போலீஸ் அகாடமி இயக்குநர் (கூடுதல் டிஜிபி) ஈஸ்வரமூர்த்தி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். அந்தவகையில், நேற்று முன்தினம் ஜனவரி 3 ஆம் தேதி போலீஸ் அதிகாரிகளுடன் மினி கூட்டம் ஒன்றை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் போலீஸ் அகடாமி துணை இயக்குநர், காஞ்சிபுரம் எஸ்பி, செங்கல்பட்டு எஸ்பி, வெளி மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பல்வேறு மொழிகள் தெரிந்த எஸ்ஐ, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டிஎஸ்பி உட்பட சுமார் 40 பேர் கலந்துகொண்டனர் .
இந்த ஆலோசனையின் போது, “இதுபோன்று நீங்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்றால் என்னென்ன வசதிகளை எதிர்பார்ப்பீர்கள். என்னென்ன ஆசை படுவீர்கள் வெளிப்படையாகப் பேசுங்கள்” என்று கேட்டார் ஈஸ்வரமூர்த்தி.
அப்போது மீட்டிங்கில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் தெரிவித்தனர்.
அதில் பெரும்பான்மையானவர்கள, “தங்குவதற்கு நல்ல இடம், உணவு இருக்க வேண்டும். மொழி பிரச்சினையை எதிர்கொள்ள அந்தந்த மொழியை அறிந்த ஒருவர் நம்முடன் இருக்க வேண்டும். அதுபோன்று நாம் போகும் மாநிலத்திலுள்ள முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க ஆசை” என்று கூறினர்.
உடனே இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி, இங்கு வருபவர்களுக்கும் நீங்கள் இதையே செய்ய வேண்டும். வருபவர்கள் மாமல்லபுரம், புதுச்சேரி, மெரினா போன்ற இடங்களைச் சுற்றி பார்க்க விருப்பம் தெரிவித்தால் அழைத்துச் சென்று வாருங்கள்.
அவர்கள் சமைக்க அல்லது உண்ண விரும்புவதை வாங்கி வந்து கொடுங்கள். தங்கும் அறைகள் சிறப்பாக இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்.
துப்பாக்கி சுடும் போட்டி முடிந்து அவரவர் மாநிலத்திற்குத் திரும்பும்போது தமிழ்நாட்டு மக்களையும் போலீஸையும் மறக்கக் கூடாது. தமிழ்நாடு போல் இதுவரை எந்த மாநிலத்தையும் பார்த்தது இல்லை என்று பேசும் அளவிற்கு நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
அதோடு, “ஜனவரி 5ஆம் தேதி மாலை அகடாமிக்கு வந்துவிட வேண்டும். அனைவரையும் வரவேற்க தயாராகிவிட வேண்டும்” என்று மீட்டிங்கை முடித்துள்ளார் இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து தமிழகத்துக்கு வருபவர்களை கவனித்துக்கொள்ள குழுக்களையும் அமைத்துள்ளார்.
ஒவ்வொரு குழுவிலும் ஒரு லைசன்ஸ் ஆபிசர் உட்பட நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர். ஒரு குழுவுக்கு நான்கு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து வருபவர்கள் தங்கியிருக்கும் அறையிலிருந்து அகடாமிக்கு அழைத்து வந்து செல்ல இரண்டு வாகனங்கள் மற்றும் சுற்றி பார்க்க ஒரு வாகனமும் தனியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுபோன்று அனைத்து வசதிகளுடன் தங்கும் விடுதியும் தயாராகி வருகிறது.
_வணங்காமுடி
பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட தாத்தா: பளார் என விட்ட பாட்டி!
காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்!