மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணைய உண்மை கண்டறியும் குழு இன்று (டிசம்பர் 30) விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் ஞானசேகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.
இந்தசூழலில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் என இரண்டு பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரகத்கர் உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில், டெல்லியில் இருந்து மகளிர் ஆணைய உண்மை கண்டறியும் குழு நேற்று (டிசம்பர் 29) சென்னை வந்தனர். இன்று காலை அண்ணா பல்கலைக்கழகம் சென்ற குழு, விசாரணையில் இறங்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், போஷ் கமிட்டி உறுப்பினர்கள், மாணவர்கள், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்ய உள்ளனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஆளுநர் ரவி கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…