புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் தனது வீட்டின் குளியலறையில் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து இன்று (நவம்பர் 10) உயிரிழந்தார். இவருக்கு வயது 66.
கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இன்று குளியலறைக்கு அவர் சென்ற போது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்படவே, உடனடியாக அவரை உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்திரா சௌந்தர்ராஜன் மரணத்தையடுத்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
மதுரை டிவிஎஸ் காலனியில் கடந்த 40 ஆண்டுகளாக அவர் வசித்தாலும், சேலத்தை பூர்வீகமாக கொண்டவர் இந்திரா சௌந்தர்ராஜன். ஆன்மிக சொற்பொழிவு, திரைப்படங்கள், நாவல்கள் போன்ற பல துறைகள் மூலம் புகழ்பெற்றவர்.
அவள் ஒரு சாவித்ரி, ஸ்ரீபுரம், எங்கே என் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான 700 சிறுகதைகள் எழுதியுள்ளார். 340 நாவல்களையும் 105 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். சிருங்காரம், அனந்தபுரத்து வீடு ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.
சிருங்காரம் படத்திற்காக தேசிய விருதும், ‘ருத்ரம்’ தொலைக்காட்சித் தொடருக்காக தமிழக அரசின் விருதும் பெற்றார்.
இவர் எழுதிய என் பெயர் ரங்கநாயகி எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் 3ஆவது பரிசு பெற்றது.
மேலும் சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருது, மைலாப்பூர் அகாடமி விருது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
நடிகர் டெல்லி கணேஷ் மறைவு செய்தியால் தமிழ் திரையுலகம் சோகத்தில் உள்ள நிலையில், புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு செய்தி கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”மக்கள் திட்டங்களுக்கு உங்கள் பெயரையா வைக்கமுடியும்?”: எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின்
தலைமுறைகள் தாண்டி தொடர்ந்த முகம் – டெல்லி கணேஷ்