National Award to Teachers 2023

நல்லாசிரியர் விருது: இன்னும் என்ன செய்ய வேண்டும்?

சிறப்புக் கட்டுரை தமிழகம்

நா.மணி

அடுத்த ஆசிரியர் தினத்திற்கு சற்றேறக்குறைய ஒரே ஒரு மாதமே இருக்கிறது. ஆசிரியர் தினத்தையொட்டி விருதுகள் அறிவிக்கப்பட்டதும், வழக்கமான வாழ்த்துக்களோடு, மத்திய மாநில, அரசுகளின் விருதுகளோடும் நிறைவுற்று விடும்.

விருதுகள் அறிவிக்கப்பட்டது முதல் விமர்சனங்களும் தொடங்கி விடும். விருதுகளின் மகிழ்ச்சி, ஆரவாரம் அடங்கினாலும் விமர்சனங்கள் வெகுநாள் நீடிக்கும். அடுத்த விருதுகள் வரையோ அல்லது நிரந்தரமாகக் கூட அவை தொடரும்.

விருதுகள் என்றால் விமர்சனங்கள் இல்லாமல் இருக்குமா? அதிலும் அரசு விருதுகள் என்றால் அதில் அரசியலுக்கும் பஞ்சம் இருக்காது தானே!  இந்த விமர்சனங்களே இல்லாமல் விருதுகளை வழங்க முடியுமா என்பது கேள்விக் குறியே.

ஆனால் விமர்சனங்களை பெருமளவு குறைக்க இயலும். அதற்கான வழிமுறைகளை கைக் கொள்ள அரசு இதுவரை தயாராக இல்லை. விருதுகளின் மீதான விமர்சனங்களை பதிவு செய்ய வேண்டும் முதலில். பின்னர் பரிசீலனை செய்ய வேண்டும். அடுத்து பகுப்பாய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த நடைமுறை காத்திரமாக பின்பற்றப்பட்டால் விருதுகளின் மீதான விமர்சனங்கள் குறையும். விருதுகளுக்கு மெருகேற்றும் பணி நடக்கும்.

எப்படியும் யாரோ சிலர் விமர்சிக்கத் தானே செய்வார்கள் என்று விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் விட்டால் விமர்சனங்களின் விகிதம் அதிகரித்து கொண்டே செல்லும். விருதுகளை மெருகேற்ற என்ன செய்யலாம் என்பதற்கான ஓர் முன் மொழிவு.

மாணவர்கள் தான் நீதிபதிகள்!

அரசோ கல்வித்துறை அதிகாரிகளோ பாராட்டுவது விருதளிப்பது அதிகாரத்தின் பாராட்டு. அதைப் பெறத்தான் மனம் துடிக்கும். கைகள் ஏங்கும். கால்கள் பரபரக்கும். பாராட்டை பெறுவதற்கான பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளும்.

இதில் அனைத்தும் அடங்கும். ஆனால் திட்டமிட்டு பெற முடியாத எந்தவித ஆலாபனைகளாலும் கிட்டிடாத ஒரு விருதும் பாராட்டும் உண்டு.  அது ஓர் ஆசிரியருக்கு மாணவர்கள் வழங்கும் பாராட்டு. விருது. உண்மையில் ஓர் ஆசிரியரை நல்லாசிரியர் என்று சொல்ல வேண்டியது, மதிப்பிட வேண்டியது அவரது மாணவர்கள்.

அவர்களே உண்மையான நீதிபதிகள். ஆனால் பல ஆசிரியர்கள் மாணவர்களின் தீர்ப்புக்கு அஞ்சி நடுங்குகின்றனர். மாணவர்களின் மதிப்பீட்டை பொருட்படுத்த மறுக்கின்றனர். ஆசிரியர் பற்றிய மாணவர்களின் மதிப்பீடு என்ற பேச்சு வந்தாலே, “நிர்வாகம் அதனை பகடைக் காயாக பயன்படுத்திக் கொள்ளும்” என்ற ஒற்றை வரியோடு கடந்து போய் விடுகிறோம். அல்லது அவ்வாறான மாணவர்கள் மதிப்பீட்டை கண்டிக்கிறோம். உண்மையில் மாணவர்களின் மதிப்பீடு எப்படி இருக்கிறது?

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் 60 மாணவர்கள் அடங்கிய பட்ட வகுப்பு ஒன்றில் ஆசிரியர் தினத்தன்று ஓர் சிறு ஆய்வை மேற்கொண்டேன்.  மாணவர்களிடம் இரண்டு கேள்விகளை முன்வைத்து எழுத்து பூர்வமாக பதிலைக் கோரினேன்.

மலைக்க வைத்த மாணவர்களின் பதில்கள்

ஒன்று நீங்கள் பள்ளியில் படித்த பன்னிரண்டு ஆண்டுகளில் உங்கள் மனத்தை மிகவும்  கவர்ந்த ஒரே ஒரு ஆசிரியர் பெயரைக் குறிப்பிடவேண்டும். ஏன் அவரை மனம் கவர்ந்த நல்லாசிரியர் என்று சொல்கிறீர்கள்? இரண்டு, ‘நல்ல ஆசிரியர்’ என்பதற்கான இலக்கணத்தை பல கல்வியாளர்கள் நல்கியுள்ளனர். பெரும் தொலைநோக்கு சிந்தனையாளர்கள் வழங்கியுள்ளனர். ஆனால், மாணவர்கள் ஆகிய உங்களிடம், நல்ல ஆசிரியர் என்பதற்கான இலக்கணம் என்னவாக இருக்கிறது?

மாணவர்களின் பதில்கள் மலைக்க வைத்தது. அந்த பதில்களில் நமது மரபார்ந்த கற்பிதங்களை சுக்குநூறாக்கியது. மிக முக்கியமாக, கண்டிப்பான ஆசிரியர்களை, கறாரான ஆசிரியர்களை, காலம் தவறாதவர்களை, மாணவர்கள் விரும்புவதில்லை என்று, இன்றுவரை ஆசிரியர்கள்  முன் வைக்கும் மூடநம்பிக்கை அதில்  ஒன்று.

அதேபோல், சரியாக பாடம் நடத்தாமல், மாணவர்கள் விரும்பிய வண்ணம் வக்கணையாக பேசிவிட்டு, வகுப்பறை பாட வேளையை கொன்று தீர்க்கும் ஆசிரியர்களையும் மாணவர்கள் விரும்பவில்லை.

National Award to Teachers 2023 N Mani

வெற்று சிரிப்பும், அரட்டையுமாக, வகுப்பில் பொழுதைக் கழித்த எந்தவொரு ஆசிரியரையும், மாணவர்கள் மனம் கவர்ந்த ஆசிரியர் என்று பதிவு செய்யவில்லை. ஆசிரியரின் மிகச்சிறந்த கற்றல் கற்பித்தல் முறைகளுக்காக  மட்டுமல்லாமல், ஆசிரியரின் சமூக சேவை மனப்பான்மை, ஈகை குணம் என எண்ணற்ற அரிய குணங்களுக்காக அவர்களை ஆராதித்தது தெரிய வந்தது.

இந்த ஆசிரியர்களில் உடற்கல்வி ஆசிரியர்கள் அடக்கம். பெற்றோர் ஆசிரியர் சங்கம் வழங்கும் சொற்ப  சம்பளத்தில்  பணியாற்றி வந்த ஆசிரியர்கள் அடக்கம். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஏராளமான நிரந்தரமான ஆசிரியர்களிடம் படித்திருந்தாலும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் கீழ் பணியாற்றி வந்த ஆசிரியர்களை மனம் கவர்ந்த நல்லாசிரியர் என்று மாணவர்கள் ஆராதனை செய்த அனுபவம் அந்த ஆய்வில் கிடைத்தது.

பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்புகளில் கூட அடித்துப் படிக்க வைக்கும் ஆசிரியர்கள். அடித்தாலும் அவர்தான் எங்கள் மனம் கவர்ந்த நல்லாசிரியர் என ஆராதனை செய்யும் மாணவர்கள். தமது மாணவர்களின் மீது தமக்கே நம்பிக்கையில்லை. ஆனால், அவர்கள் ஆசிரியர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை,பற்றுறுதி, பாசம், நேசம், அலாதியானது. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என உழைக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இது உண்டு. அவர்கள் கூட “நாம் கண்டிப்புடன் இருக்கிறோம். நம் மாணவர்களுக்கு நம்மை பிடிக்காது” என்றே நினைக்கிறார்கள்.

தான் படித்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் அவர். தன் வகுப்புக்கு வரவில்லை அவர். தனக்கு பாடம் சொல்லித் தரவில்லை. தன்னிடம் ஒருநாளும் பேசியது இல்லை. தான் படித்த பள்ளியில் பணியாற்றி வந்த அந்த அற்பணிப்பு மிகுந்த ஆசிரியரே தனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் என்று எழுதிக் கொடுத்தார்.

இந்த அறுபது மாணவர்கள் தேர்வு செய்த நல்லாசிரியர்களை வரவழைத்து ஒரு கூட்டம் நடத்தினோம்.  இதில் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு ஆசிரியர் வரை அடக்கம். தனது வாழ்நாளில் சராசரியாக, பதினைந்து முதல் இருபது ஆசிரியர்களிடம் படித்து வந்த மாணவர்கள், தன்னை மட்டும் மனம் கவர்ந்த ஆசிரியாக தேர்வு செய்தது குறித்து மிகவும் நெகிழ்ந்தனர். மேடையிலேயே விம்மி அழுதனர். இந்த மாணவர்கள் அளித்த நம்பிக்கை உற்சாகம் போதும் வாழ்நாள் முழுவதும் உற்சாகமாக பணியாற்றுவோம் என்றனர்.

மாணவர்களால் தங்கள் பள்ளிப் பருவ நல்லாசிரியராகத் தேர்வு பெற்ற இந்த அறுபது ஆசிரியர்களில் யார் ஒருவரும் மத்திய மாநில அரசுகளின் நல்லாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர் ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அரசின் அளவுகோல் படியே கூட நல்லாசிரியர் விருதுக்கான தகுதிகள் பெற்றிருப்போர் ஏராளமானவர்கள் விடுபட்டு இருப்பர். விண்ணப்பித்து பெற வேண்டிய விருது எனக்கு வேண்டாம் என்று ஒதுங்கி இருப்போர் ஏராளமான இருக்கலாம்.

நல்லாசிரியர் தேர்வில் வெளிப்படைத்தன்மை!

என்னதான் நல்லாசிரியர் என்று எல்லோரும்  அறிந்து இருப்பினும் அவரது நேர்மையான விமர்சனம் சங்கச் செயல்பாடுகள் காரணமாக விருதில் இருந்து ஒதுக்கப்பட்டோர் இருக்கலாம். முதன்மைக் கல்வி அலுவலரால் வலுவாக பரிந்துரைக்கப்பட்டு  நல்லாசிரியர் விருது கிட்டாத ஆசிரியர் பலர் உண்டு. நல்லாசிரியர் விருது வழங்குதல் ஓர் குறியீடு. நல்ல பல நல்லாசிரியர்களை உருவாக்கும் முயற்சி. நல்லாசிரியர் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சி.

அதன்மேல் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஓர் ஈர்ப்பு வரவேண்டும். நல்லாசிரியர்களை விருதுகள் தேடி வரும் என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.  விருதுக்கான அளவுகோல்கள்  என்ன என்பது வெளிப்படையாக  இருக்க வேண்டும். நல்லாசிரியர் தேர்வில் அளவுகோலில் மாணவர்கள் கருத்துக்கு முக்கிய  இடம் அளிக்க வேண்டும்.

அப்படி மாணவர்கள் விரும்பும் நல்லாசிரியரைத் தேடத் தொடங்கினால் விருதுகளின் மீதான விமர்சனம் பெருமளவு குறைந்து விடும் அவ்விருது என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்தப்பணியை நிறைவேற்றுதற்கு ஏதுவாக  நல்லாசிரியர்கள் விருதுகளும் பாராட்டுகளும் அமையும். மாணவர்கள் விரும்பும் நல்லாசிரியரே நல்லாசிரியராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது நமது வாதம் அல்ல.

மாணவர்களின் பின்னூட்டம் இல்லாத நல்லாசிரியர் தேர்வு சரியல்ல. அதேபோல் தொடக்கம் முதல் இறுதிவரை எந்தவொரு தலையீடும் இல்லாத ஒரு தேர்வு முறை உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். அது எப்படி என்ற கேள்வி எழலாம்‌. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதே அதற்கு பதில். தேர்வு முறையில் எவ்வளவு தூரம் வெளிப்படை தன்மை கையாள முடிகிறதோ அவ்வளவு தூரம் வெளிப்படை தன்மையை பின்பற்றுதல் தேர்வுகள் சரியான திசை வழியில் செல்ல உறுதுணையாக இருக்கும்.

National Award to Teachers 2023 N Mani

நல்லாசிரியர்களை விருதுக்கு விண்ணப்பம் செய்யும் படி கூறுவதே சற்று அவர்களை குறைத்து மதிப்பிடும் செயல்தான். பார்ப்போம், இந்தாண்டு விருதுகள் எவ்வாறு அமையப் போகிறதென்று! இந்தக் கட்டுரையை ஒட்டி இன்னும் கூடுதலாக தெரிந்து கொள்ள கட்டுரையாளரின் “பள்ளிக் கூடத் தேர்தல்: நல்லாசிரியரை தேர்வு செய்த மாணவர்கள்” என்ற நூலை வாசிக்கலாம். வெளியீடு பாரதி புத்தகாலயம்.

கட்டுரையாளர் குறிப்பு

National Award to Teachers 2023 N Mani

நா.மணி

பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு

“500 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை” – பெரியகருப்பன்

லாலு குடும்பத்தினரின் சொத்துகள் முடக்கம்!

+1
0
+1
0
+1
1
+1
9
+1
0
+1
0
+1
1