கொலை முயற்சி வழக்கில் நரிக்குறவ பெண் அஸ்வினி இன்று (ஆகஸ்ட் 16) கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி நரிக்குறவ குடியிருப்பை சேர்ந்த அஸ்வினி என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் தங்கள் சமூகத்தினருடன் சாப்பிட சென்றார். அப்போது கோவில் நிர்வாகிகள் அவமதித்ததாக வீடியோ மூலம் அஸ்வினி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அஸ்வினி மற்றும் அவரது குடும்பத்தினரை அதே கோவிலுக்கு அழைத்துச் சென்றதோடு அவர்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.
இதனையடுத்து, கடந்த ஆண்டு தீபாவளியின் போது நலத்திட்ட உதவிகளை வழங்க பூஞ்சேரி பகுதிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அஸ்வினி வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதன்மூலம் மீண்டும் அஸ்வினி சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கினார்.
இதன்பின்னர் தான் அஸ்வினி மீது ஏராளமான புகார்கள் வரத்தொடங்கின. நரிக்குறவ பெண் அஸ்வினி, தான் முதல்வருக்கு வேண்டப்பட்டவர் என்று கூறி ஹோட்டல்களுக்கு சென்று மிரட்டுவது, மருந்துக்கடை, டீக்கடை, பேக்கரிக்கு காசு கொடுக்காமல் ஏமாற்றுவது, தகராறில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியை சேர்ந்த விஜி என்பவரின் மனைவி நதியா என்பவருக்கும் அஸ்வினிக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதியில் நதியா ஊசிமணி, பாசிமணி விற்கும் கடையை அமைத்துள்ளார்.
கடை அமைப்பதில் அஸ்வினிக்கும், நதியாவிற்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. எப்போது போல் கடை அமைப்பதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாய் தகராறு ஒரு கட்டத்தில் கைகலப்பாகவும் மாறியுள்ளது.
அப்போது அஸ்வினி கையில் வைத்திருந்த பேனா கத்தியால் நதியாவை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நதியாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் நதியாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரது வலது தோள்பட்டையில் 10 தையலும், வயிற்றில் 5 தையலும் என மொத்தம் 15 தையல்கள் போடப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று மதியம் 1 மணியளவில் நதியா மாமல்லபுரம் E1 காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். நதியாவுடன் 2 பேர் சென்றுள்ளனர்.
அப்போது காவல் நிலையத்தில் துணை காவல் ஆய்வாளர் விஜயகுமார் இல்லாததால், புகாரை எழுதிக் கொடுத்துவிட்டு போகுமாறு கான்ஸ்டபிள் கூறியுள்ளனர்.
ஆனால் தனக்கும் தன்னுடன் வந்தவர்களுக்கும் எழுத படிக்க தெரியாது என்று நீங்களே புகார் எழுதிக் கொள்ளுங்கள் என்று காவலர்களிடம் புலம்பியுள்ளார்.
இதனையடுத்து எஸ்.ஐ சிறிது நேரத்தில் வந்துவிடுவார்கள் என்று நதியா மற்றும் உடன் வந்தவர்களை காவல்நிலையத்திலேயே அமர வைத்துள்ளனர். இதில் நதியாவிற்கு மட்டும் சாப்பிடுவதற்கு பிரியாணி வாங்கி கொடுத்துள்ளனர் போலீஸ் அதிகாரிகள்.
பின்னர் 4 மணிக்கு மேல் எஸ்.ஐ விஜயகுமார் வந்ததும், அவரிடம் நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார் நதியா. எஸ்.ஐ.விஜயகுமாரும், போலீஸ் அதிகாரிகள் புகார் எழுத கூடாது, நீங்கள் தான் புகார் எழுதி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் நதியா மீண்டும் எழுத படிக்க தெரியாது என்று புலம்பியுள்ளார்.
இதனைக் கண்டு காவல் நிலையத்தில் இருந்த நபர் ஒருவர் நதியாவிற்காக புகார் எழுதி கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி என வழக்குப் பதிவு செய்து அஸ்வினியை இன்று மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அஸ்வினி திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். திருக்கழுக்குன்றம் நீதிபதி கதிரவன், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வினியை ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் அஸ்வினியை புழல் சிறையில் அடைத்தனர்.
பிரபலமான சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் கடை அமைக்கும் தகராறில் கத்தியை கொண்டு குத்திய சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
ஜெயிலருக்கு டிக்கெட்டு… அப்போ மாநாட்டுக்கு… அதாம்ல இது!: அப்டேட் குமாரு
பிரபாகரன் மனைவியும், மகளும் உயிருடன் உள்ளனரா?: இலங்கை அரசு மறுப்பு!