நரிக்குறவர்களுக்கு மறுப்பு: ரோகிணி தியேட்டர் சொல்வது என்ன?

Published On:

| By Monisha

பத்து தல படத்தைப் பார்ப்பதற்கு நரிக்குறவ மக்களுக்கு அனுமதி வழங்காததற்கு கண்டனங்கள் அதிகரித்த நிலையில் திரையரங்க நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் “பத்து தல” படம் உருவாகியுள்ளது. நடிகை சாயிஷா நடனம் ஆடிய ’ராவடி’ பாடல் உட்பட ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

பத்து தல படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்திருந்தது. இந்நிலையில் இன்று (மார்ச் 30) காலை 8 மணிக்கு பத்து தல படம் வெளியானது.

இந்த படத்தைப் பார்க்க டிக்கெட்டுடன் வந்த நீலவேணி என்ற நரிக்குறவ பெண்ணுக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கம் அனுமதி மறுத்துள்ளது.

டிக்கெட்டை எடுத்துக் கொண்டு நீலவேணி குழந்தைகளுடன் படம் பார்க்க சென்றபோது, தியேட்டர் வெளியில் இருக்கும் டிக்கெட் பரிசோதனை செய்யும் நபர் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

இதனால் அந்த பெண் திரும்பி சென்றபோது அங்கிருந்தவர்கள், ஏன் படம் பார்க்க உள்ளே போகாமல் திரும்பி வந்தீர்கள் என்று கேட்டதற்கு அந்த பெண், உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட அவர்கள், ஏன் அவரை அனுமதிக்கவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதத்திற்கு பிறகு தான் நரிக்குறவர் பெண் உட்பட குழந்தைகள் படம் பார்க்க உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்த நிலையில், வீடியோ அடிப்படையில் கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு திரையரங்க நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து ரோகிணி திரையரங்கம் இந்த சம்பவத்திற்கு விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ”இன்று காலை பத்து தல படத்தைப் பார்க்க டிக்கெட்டுகளுடன் சில நபர்கள் தங்கள் குழந்தைகளுடன் திரையரங்கிற்குள் நுழைய முயன்றனர்.

பத்து தல படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்படி யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள படத்தை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பார்க்க அனுமதிக்க முடியாது, எனவே, 2,6,8 மற்றும் 10 வயதுடைய குழந்தைகளுடன் வந்திருந்த குடும்பத்தினருக்கு எங்கள் டிக்கெட் சோதனை ஊழியர்கள் இதன் அடிப்படையில் தான் அனுமதி மறுத்துள்ளனர்.

இருப்பினும் சுற்றி இருந்த பார்வையாளர்கள் நிலைமையை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் வேறு கோணத்தில் பார்த்ததால், சட்டம் ஒழுங்குப் பிரச்சனையைத் தவிர்க்க அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் சரியான நேரத்தில் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்” என்று குறிப்பிட்டு அவர்கள் குடும்பத்துடன் படம் பார்க்கும் வீடியோவையும் இணைத்துள்ளது.

ரோகிணி திரையரங்கம் விளக்கம் அளித்திருந்தாலும், அவர்களது ஊழியர்கள் இந்த விவகாரத்தைக் கையாண்ட முறை மிகவும் மோசமானது என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், “அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது. எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பலர், பெற்றோருடன் வரும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட படங்களைப் பார்க்க அனுமதிக்க முடியும். இந்த சம்பவத்திற்குத் திரையரங்க நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும். இது ஒரு அப்பட்டமான பாகுபாடு என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நரிக்குறவ பெண் அளித்த பேட்டியில், “எங்களை பார்த்தால் அவங்களுக்கு எப்படி தெரியுதுனு தெரியல. போன முறை வாரிசு படத்திற்கு வந்த போது கூட எங்கக்கிட்ட இருந்த டிக்கெட்டை வாங்கி கிழித்துவிட்டு திருப்பி அனுப்பிட்டாங்க. காசு கொடுத்து டிக்கெட் வாங்கினாலும் படம் பார்க்க உள்ளே அனுமதிக்க மாட்டாங்க” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் திரையரங்க நிர்வாகம் நரிக்குறவ மக்களை படம் பார்க்க அனுமதித்தது குறித்து விளக்கம் அளித்திருந்தாலும், இந்த செயலுக்கு விளக்கம் அளிக்காதது ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக, தர்பார் படம் வெளியான போது, தனுஷின் 2வது மகன் படம் பார்த்த புகைப்படங்களை ரோகிணி திரையரங்கம் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “thalaivar family celebrating” என்று பதிவிட்டிருந்தது.

இதைக் கண்ட சமூக ஆர்வலர்கள் சிலர் 2 ஆண்டுகள் பழமையான அந்த ட்விட்டர் பதிவை மேற்கோள்காட்டி, யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட தர்பார் படத்திற்கு 9 அல்லது 10 வயதுள்ள தனுஷின் மகனை எப்படி நீங்கள் அனுமதி அளித்தீர்கள் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

மோனிஷா

விராட் – ஷாருக் ரசிகர்கள் இணையத்தில் மோதல்!

15 நாட்களாக சிகிச்சை: ஈவிகேஎஸ் இளங்கோவன் எப்படி இருக்கிறார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment