சென்னையில் ஸ்விகியில் உணவு டெலிவரி செய்துகொண்டே கல்லூரி இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் மாணவர்களிடையே போதைப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார். அதற்காக காவல்துறையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பவர்களை கைது செய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதனால் போலீஸ் தீவிர விசாரணையில் இறங்கியபோது, கீழ்பாக்கத்தில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் பெயர் முனியசாமி (வயது 20) அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளார்.

முனியசாமியிடம் இருந்து 620 வலிநிவாரணி மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் சூளைமேட்டை சேர்ந்த தனது நண்பர் ராஜி என்பவர், மாத்திரைகளை விற்றுத் தந்தால் கமிஷன் தருவதாக கூறியதால் கடந்த இரண்டரை வாரங்களாக மாத்திரைகளை விற்பதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
செல்போனில் வரும் ஆர்டரின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்து மாத்திரைகளை விநியோகம் செய்து வந்துள்ளார். பெரும்பாலும் கல்லூரி மாணவர்களை குறி வைத்தே விற்பனை நடந்துள்ளது. கைதான முனியசாமி ஸ்விகி உணவு டெலிவரி நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணியாற்றி வந்துள்ளார்.
முனியசாமிக்கு போதை மாத்திரைகளை விநியோகம் செய்த ராஜி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ராஜி ஹைதராபாத் சென்று, அங்கிருந்து மாத்திரைகளை வாங்கி வந்து, தனது நண்பர்கள் மூலம் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
கலை.ரா