“வாங்க மக்களே…” என்று அன்பாக அழைப்பதில் ஆகட்டும்.. வியர்வை உலரும் முன்பாக தேன் கலந்த தண்ணீர் தந்து உபசரிப்பதில் ஆகட்டும்.. விருந்தோம்பல் பண்பில் நாஞ்சில் மக்களுக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு.
பசிக்கு மட்டுமன்றி, ருசிக்கும், ரசனைக்கும் உரியதாக உணவைக்கருதும் நாஞ்சில் நாட்டு மக்களின் உணவுகளில் இந்த நாஞ்சில் நாட்டு மீன் குழம்புக்கும் முக்கிய இடமுண்டு.
என்ன தேவை?
கிளி மீன் (கன்னியாகுமரி கடற்பகுதியில் அதிகம் கிடைக்கக்கூடியவை) – அரை கிலோ
புளி – ஒரு எலுமிச்சைப் பழ அளவு
முருங்கைக்காய் – 2
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
அரைக்க…
காய்ந்த மிளகாய் – 7
கறிவேப்பிலை – சிறிதளவு
சோம்பு – ஒரு டீஸ்பூன்
தேங்காய் – ஒன்றில் பாதி (துருவிக் கொள்ளவும்)
மல்லி (தனியா) – அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் -3
எப்படிச் செய்வது?
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்துசூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். புளியைக் கெட்டியாகக் கரைத்து அத்துடன் அரைத்த விழுதைச் சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம் கறிவேப்பிலை தாளிக்கவும். இதில் முருங்கக்காயைச் சேர்த்து வதக்கி, கலந்து வைத்துள்ள புளிக்கரைசல் இதில் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். சுத்தம் செய்த மீனை இறுதியாகச் சேர்த்து 10 நிமிடம் கழித்து இறக்கிப் பரிமாறவும்.
சேலம் பிச்சுப்போட்ட கோழி வறுவல்
கிச்சன் கீர்த்தனா : கீழக்கரை மீன் குழம்பு