திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பிளஸ் 2 மாணவர் சின்னத்துரை தாக்கப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த கூலித்தொழிலாளி முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியின் மகன் சின்னத்துரை. வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரை அதே பள்ளியில் பயின்ற சக மாணவர்கள் அடிக்கடி ரேகிங் செய்து வந்துள்ளனர். இதனால் சக மாணவர்களுக்கு பயந்து ஒரு வாரமாக சின்னத்துரை வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதனையடுத்து பள்ளி நிர்வாகம் சின்னத்துரை பெற்றோரை அழைத்து பள்ளிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி மீண்டும் பள்ளிக்கு சென்ற மாணவர் சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். சின்னத்துரை தன்னை ரேகிங் செய்தவர்களை சொல்ல ஆசிரியர் 3 மாணவர்களை கண்டித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தில் வைத்து சின்னத்துரையை மிரட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 10-ஆம் தேதி இரவு சின்னத்துரை வீட்டிற்கு சென்று அரிவாளால் அவரை வெட்டியுள்ளனர்.
இதனை தடுக்க முயன்ற சின்னத்துரை தங்கை சந்திர செல்வியையும் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இருவரும் ஆபத்தான நிலையில் நாங்குநேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சின்னத்துரை மற்றும் அவரது தங்கையை அரிவாளால் வெட்டிய 6 மாணவர்களை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு, கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் திருநெல்வேலி சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மாணவர் சின்னத்துரை தாக்கப்பட்ட வழக்கில் இன்று மேலும் ஒரு மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நாங்குநேரி காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை சரவணன்
நாங்குநேரி சம்பவம்: மேலும் ஒரு மாணவர் கைது!
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இறுதி போட்டியில் இந்தியா
மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு!
கிரிவல பாதையில் அசைவ உணவுகள்: ஆளுநர் வருத்தம்!