நாங்குநேரி மாணவன் சின்னதுரை குணமடைந்து வரும் நிலையில் ஆசிரியரின் உதவியோடு காலாண்டு தேர்வு எழுதி வருகிறார்.
நாங்குநேரி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சின்னதுரை மற்றும் அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோர் கடந்த மாதம் தன்னுடன் படிக்கக்கூடிய சக மாணவர்களால் சாதிய வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இவர்கள் அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த சாதிய வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.
அதனைத்தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் வருகை தந்து மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை ஆகியோரை நலம் விசாரித்து சென்றார்.
அப்போது மாணவன் சின்னதுரை மற்றும் அவரது தங்கை சந்திர செல்வி ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணத் தொகையும் மற்றும் உயர்தர சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது 80 சதவீதம் உடல் நலம் தேறி வந்துள்ள மாணவர் சின்னதுரை ஆசிரியர் உதவியோடு தனது காலாண்டு தேர்வினை நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து எழுதி வருகிறார்.
இதற்காக நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஏற்பாட்டின் பேரில் தினமும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் வருகிறார்கள் .
நெல்லை மாவட்டத்திற்கு என்று தயாரிக்கப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு காலாண்டு பொது தேர்வுக்கான வினாத்தாள்களை கொண்டு வந்து மாணவன் சின்னதுரை முன்பாக வாசித்துக் காண்பித்து அதற்கு மாணவர் சின்னதுரை சொல்லக்கூடிய பதில்களை ஆசிரியர் எழுதி வருகிறார்.
மேலும் அவருடன் அவர் தங்கை சந்திரா செல்வியும் பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு எழுதி வருகிறார்.
சின்னதுரையிடம் கேள்வி கேட்டு பதில் எழுதிய வள்ளியூர் அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் முனைவர் எல்.ராதா மின்னம்பலத்துக்கு அளித்த பேட்டியில்,
“சின்னதுரையால் முழுமையாக குணம் பெற முடியாத சூழ்நிலையில் தேர்வு எழுத முடியவில்லை. அதனால் முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தலின் பேரில் என்னை தேர்வு அதிகாரியாக போட்டிருக்கிறார்கள்.
சின்னதுரை புத்தகத்தில் படித்து, கேள்விகளுக்கு பதில் சொல்ல சொல்ல நான் எழுதுவேன். இதன்மூலம் சின்னதுரையின் படிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு மதிப்பெண் வினா, இரண்டு மதிப்பெண் வினா என அனைத்துக்கும் சிறப்பாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்றார்.
நெல்லை சரவணன்
உதை வாங்கப்போற… மந்திரிதானே நீ… : மக்களவையில் தயாநிதி மாறன் ஆவேசம்!
“அண்ணா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்” – அண்ணாமலை