நாங்குநேரி மாணவன் சின்னதுரை மற்றும் அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோர் மீது இழைக்கப்பட்ட சாதிய வன்கொடுமையான தாக்குதலின் எதிரொலியாக பல்வேறு ஊடகங்களில் அவரது தாய் மற்றும் உறவினர்கள் பேட்டியளித்ததை தொடர்ந்து அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் தான் நாங்குநேரி. இந்த நாங்குநேரியில் பிரதான தொழிலாக பார்க்கப்படுவது விவசாயமும் சுய தொழிலும் மட்டும்தான்.
ஒரு சில இளைஞர்கள் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு செல்கிறார்கள். ஒரு சில படித்த இளைஞர்கள் ஊரை காலி செய்துவிட்டு கோயம்புத்தூர், சென்னை, போன்ற நகரங்களில் குடி பெயர்ந்து விட்டார்கள்.
தற்பொழுது நாடு முழுவதும் ஒரு அதிர்வலையே ஏற்படுத்திய விவகாரம் தான் நாங்குநேரி மாணவன் சின்னதுரை மற்றும் அவரது தங்கை சந்திரா செல்வி ஆகிய இருவருக்கும் சக மாணவர்களால் நடந்த ஜாதிய ரீதியிலான வன்கொடுமைகளும், அதன் எதிரொலியாக திட்டமிட்டு நடந்த அரிவாள் வெட்டு தாக்குதலும் தான்.
நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த 17 வயது பட்டியல் சாதி மாணவரை ஜாதி ரீதியிலாக வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரையும் அவரது தங்கையையும் வெட்டியதாக பதியப்பட்ட வழக்கில் 6 சிறார்களை போலீசார் சிறார் நீதி வாரியத்தில் ஒப்படைத்துள்ளனர்.
ஆதிக்க சாதியினர் என்ற மமதையில் பட்டியல் இன மாணவர் சின்னத்துரை மீதான இந்த தாக்குதல் நடந்ததாக பல்வேறு அரசியல் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
சாதி ரீதியாக ஒதுக்கப்படும் நாங்குநேரி பெருந்தெரு!
இந்த நிலையில் நாங்குநேரி ஊருக்கு நடுவில் பட்டியல் இன மக்கள் அதிகளவில் வசிக்கும் பெருந்தெருவின் இன்றைய நிலை என்ன என்பதை கள ஆய்வு செய்தோம். இதன்மூலம் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்துள்ளது.
நாங்குநேரி பெருந்தெருவில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக 2,500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்ததாக கூறப்படுகிறது .
அன்று முதல், இன்று வரை ஆதிக்க சாதியினரால் பட்டிலின மக்கள் மீது இந்த சமூகத்திற்கு தெரிந்தும் தெரியாமலும் சாதிய பாகுபாடு, சாதிய பார்வையில் ஏற்ற, இறக்கம் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
போதிய வேலை வாய்ப்பின்மையும், சாதிய மோதல்களும் தான் இந்த ஊரை காலி செய்து மற்ற ஊர்களுக்கு இங்கு வசித்து வந்த மக்களை நகர்த்தியது.
பேட்டி கொடுக்க அச்சப்படும் ஊர் பொது மக்கள்!
நாங்குநேரியில் தற்போது என்ன சூழல் நிலவுகிறது என்பதை கள ஆய்வு செய்வதற்காக நமது மின்னம்பலம் குழுவினர் நாங்குநேரிக்கு நேரில் சென்றார்கள்.
அப்பொழுது பெருந்தெருவில் வசிக்கக்கூடிய பொதுமக்களிடம் நாங்குநேரி மாணவன் சின்னத்துரை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்தும், இதற்கு முன்னால் இந்த ஊரில் உள்ள கலாச்சார பழக்க வழக்கங்கள் குறித்தும் நாம் அவர்களிடம் கேள்விகளை முன் வைத்தோம்.
ஆனால் அவர்கள் நாம் முன்வைத்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல மறுத்து விட்டார்கள் .
இது குறித்து காரணம் கேட்டபோது இந்த பேட்டியின் மூலமாக எங்களுக்கு எப்பொழுதும் எந்த விதமான பிரச்சனைகள் வேண்டுமானாலும் எதிர் தரப்பில் இருந்து நடக்கலாம் என்று கூறினார்கள்.
ஆகையால் இந்த ஊரில் பட்டியல் இன மக்கள் அனைவருமே தற்பொழுது ஊடகத்தின் முன்பாக தோன்றுவதற்கோ அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து தங்கள் கருத்துக்களை வெளியே சொல்லவோ அச்சப்படுகிறார்கள்.
பெருமாள் கோவிலுக்கு அனுமதி மறுப்பா?
கடந்த 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு, நெல்லை மாவட்டத்தில் சாதிய வன்கொடுமைகள் தலை தூக்கி இருந்த காலம் அது.
அப்போது முதல் நாங்குநேரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலான வானமாமலை கோவிலுக்கு பட்டியல் இனத்தவர்கள் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதியானது மறுக்கப்பட்டு இருந்தது என்று அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
அதுமுதல் பட்டியலின மக்களிடம் ’கோவிலுக்குள் நுழைய உங்களுக்கு அனுமதி கிடையாது’ என்று பிற சாதியினர் சொல்லி சொல்லியே அது அவர்கள் மனதில் வேர் ஊன்றி காணப்படுகிறது.
அப்படியே அதனை மீறியும் அந்த கோவிலுக்குள் செல்கிற ஒரு சில பட்டியலின மக்களும் கோவிலின் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள் என்கிறார்கள் இந்த ஊர் பொதுமக்கள்.
சின்னத்துரை குடும்பம் மற்றும் உறவினர்களை ஒதுக்கி வைக்க ஆலோசனை!
மாணவன் சின்னதுரை மற்றும் அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோர் மீது இழைக்கப்பட்ட சாதிய வன்கொடுமையான தாக்குதலின் எதிரொலியாக பல்வேறு ஊடகங்களின் முன்பாக சின்னதுரையின் தாய் அம்பிகா மற்றும் சின்னத்துரையின் பெரியம்மா இந்திரா தேவி ஆகியோர் பல கருத்துக்களை முன் வைத்தார்கள்.
ஆரம்பம் கால முதலே தற்போது வரை தங்களுக்கு சாதிய ரீதியான பாகுபாடுகளும் அச்சுறுத்தல்களும் அவமானங்களும் நடந்து வந்ததாகவும் அது தற்போது வரை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் சில கோவில்களில் தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்கள்.
இதன் காரணமாக பெருந்தெருவில் வசிக்கக்கூடிய சின்னதுரையின் சமூகத்தை சேர்ந்த அதே பகுதி மக்கள் தற்போது சின்னதுரையின் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் எதிராக திரும்பி உள்ளார்கள்.
இதுகுறித்து அவர்கள் பேசுகையில், “பல்வேறு ஊடகங்களில் முன்பாக பேட்டி கொடுத்ததன் எதிரொலியாக எதிர் சமூகத்தினர் (தேவர்) தங்கள் ஊர் பொதுமக்கள் மீது கோபமாக உள்ளதாகவும், தங்களை வெறுப்புடன் பார்ப்பதாகவும், இதன் மூலம் தங்களுக்கு வர வேண்டிய தினசரி வேலை வாய்ப்புகளும் குறைந்து வருகிறது” என்று தெரிவிக்கிறார்கள்.
மேலும், “பெருந்தெரு ஊர் பொதுமக்கள் சார்பாக அழைப்பு விடுத்தும் சின்னதுரையின் பெரியம்மா இந்திரா தேவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஊர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதனால் சின்னதுரை குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் மீது அந்த ஊர் பொதுமக்கள் கோபமாக இருக்கின்றனர். அடுத்த ஊர் கூட்டத்தில் கலந்து ஆலோசித்து அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் முடிவில் இருக்கின்றனர்” என அப்பகுதி மக்களில் சிலர் நம்மிடம் தெரிவித்தார்கள்.
அடிப்படை வசதியில்லை!
நாங்குநேரி பெருந்தருவில் தற்போது சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் அடிப்படை சாலை வசதிகள், நிரந்தர ரேஷன் கடைகள், குழந்தைகளுக்கு அங்கன்வாடி கட்டிடங்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் வந்து செல்வதற்கு வசதியாக போக்குவரத்து வசதி மற்றும் தெருவிளக்கு வசதி என்று எதுவுமே முறையாக இல்லை.
இதனால் மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்வதற்கே பயமாக உள்ளது என்று பொதுமக்கள் நம்மிடம் தெரிவித்தார்கள்.
மாணவர் சின்னதுரை சாதிய ரீதியிலான கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதன் விளைவாக இத்தனை ஆண்டு காலம் நாங்குநேரி பெருந்தெருவில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் அனுபவித்த பல கசப்பான உண்மைகள் வெளியே வர துவங்கின.
நாங்குநேரி மட்டுமின்றி கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடந்து வரும் சாதிய கொடுமைகள் குறித்து செய்திகள் வெளியாகின.
ஆனாலும் அதனை ஆதாரப்பூர்வமாக முன்வந்து தங்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற கொடுமைகளையும், அநீதிகளையும் குறித்து ஊடகம் முன்பாக பேசவே அந்த ஊர் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
இந்த ஊர் மக்களின் தேவை தான் என்ன? இவர்கள் யாரை கண்டு அச்சப்படுகிறார்கள்?
வானமாமலை கோவிலுக்கு செல்ல என்ன பிரச்சனை என்பதை தமிழக அரசு தான் பொது மக்களுக்கு விளக்க வேண்டும்.
சரவணன்