கண்டக்டர் Vs கான்ஸ்டபிள்: கட்டிப்புடி வைத்தியம்… வீடியோ வைரல்!

Published On:

| By Selvam

நாங்குநேரி போலீசார் ஆறுமுகப்பாண்டியும், பேருந்து நடத்துனரும் பரஸ்பரம் சமாதானமாக கட்டியணைத்து கைகுலுக்கும் வீடியோவை இன்று (மே 25) வெளியிட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து பாளையங்கோட்டைக்கு சென்ற அரசு பேருந்தில் பயணித்த காவலர் ஆறுமுகப்பாண்டி டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். நடத்துனருடன் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு காவல்துறை – போக்குவரத்துதுறை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

இந்தநிலையில், உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துதுறை செயலாளர் பணிந்தீர ரெட்டி ஆகியோர் இந்த பிரச்சனை குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்தொடர்ச்சியாக, நாங்குநேரி போலீசார் ஆறுமுகப்பாண்டியும், பேருந்து நடத்துனரும் பரஸ்பரம் சமரசமாக கைகுலுக்கும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில்…

காவலர் ஆறுமுகப்பாண்டியிடம் நடத்துனர், “நம்ம ரெண்டு பேரும் பொதுத்துறையில வேலை செய்யுறோம். நீங்க போலீஸ் டிபார்ட்மெண்ட், நான் டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மெண்ட். நீங்க பஸ்ல வந்தபோது, உங்க கருத்தை சொன்னீங்க… நான் என் கருத்தை சொன்னேன்.

அப்புறம் நீங்க டிக்கெட் வாங்கி டிராவல் பண்ணீங்க. ஆனா, இது சோசிஷியல் மீடியாவுல பரவி பிராப்ளம் ஆனதுக்கு நான் வருத்தம் தெரிவிச்சுக்குறேன்” என்றார்.

அப்போது ஆறுமுகப்பாண்டி, “நானும் வருத்தம் தெரிவிச்சிக்குறேன். இனிமேல் நம்ம ரெண்டு பேரும், போலீஸ் – டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மெண்ட் துறையும் நண்பர்களா பணியாற்றுவோம்” என்றார். தொடர்ந்து இருவரும் கட்டியணைத்து, காபி குடித்தனர்.

ஒரு கண்டக்டர், ஒரு கான்ஸ்டபிள் இடையேயான இந்த சமாதானம் போலீஸ் – போக்குவரத்துதுறை இடையேயான மோதல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேசத் தந்தையா சவுக்கு சங்கர் ? – சுப.வீரபாண்டியன் கேள்வி!

ஜெயலலிதா இந்துத்துவ தலைவரா? அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel