சென்னையிலே நங்கநல்லூர் அருகே எம்.எம்.டி.சி. காலனி பகுதியில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் பங்குனி உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று (ஏப்ரல் 5) நடந்த நிகழ்வு தமிழ்நாடு முழுதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் பங்குனி உற்சவத்தின் நிறைவுநாளான பங்குனி உத்திரத்தை ஒட்டி அதன் அருகே உள்ள மூவரசம்பட்டு குளத்தில் தீர்த்தவாரி நடந்திருக்கிறது. அப்போது அந்த குளத்தில் மூழ்கி ஐந்து பதின்பருவ இளைஞர்கள் உயிரிழந்திருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பங்குனி உத்திரத்தன்று தமிழ்நாடு முழுதும் சிவாலயங்களிலும், திருமால் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்த நிலையில் மூவரசம்பபட்டு குளத்தில் நடந்த இந்த கொடுமை…பக்தர்கள் தாண்டி கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கூட கடுமையாக பாதித்திருக்கிறது.
தீர்த்தவாரி என்றால் என்ன?
பங்குனி மாதம் பெரும்பாலான சிவாலயங்களில் உற்சவம் நடைபெறும், அதுவும் முருகன் ஆலயங்களில் இன்னும் பெரும் விசேஷமாக இருக்கும். பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திரம் கொண்ட நாளில்தான் முருகன் தெய்வானையை மணமுடித்தார் என்பது நம்பிக்கை.
அந்த அடிப்படையில் முருகன் ஆலயங்களில் திருக்கல்யாணம் நடைபெறும்.
பங்குனி உற்சவம் என்பது சிவாலயங்களில் பத்து நாட்கள் நடைபெறும். இந்த உற்சவத்தின் பத்தாவது நாள்தான் தீர்த்தவாரி. அதாவது பத்து நாட்கள் சுவாமி கோயிலை விட்டு வீதிகளுக்கு புறப்பாடு சென்று வருவதால், பத்தாம் நாள் அவரை குளிர்விப்பதற்காக தீர்த்தவாரி அதாவது குளத்தில் நீராடுதல் என்ற நிகழ்ச்சி உற்சவத்தின் கடைசி நிகழ்வாக நடக்கும்.
பத்து நாள் அலைச்சலை கடைசி நாள் குளத்தில் மூழ்கி எழுந்து போக்கிக் கொள்வார் சுவாமி என்பதும் ஐதீகம்.
இந்த வகையில்தான் தர்மலிங்கேஸ்வர் கோயிலில் பங்குனி உற்சவத்தின் கடைசி நாளான நேற்று (ஏப்ரல் 5) தீர்த்தவாரி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பெருமாளுக்கு சக்கரத்தாழ்வார்… சிவனுக்கு அஸ்திர தேவர்
தீர்த்தவாரி என்றால் உற்சவரான சிவனின் சிலையை அலங்கரித்து கோயிலில் இருந்து பல்லக்கில் வைத்து எடுத்துக்கொண்டு குளக்கரை வரை வருவார்கள். சிவன் சிலையை குளத்துக்குள் எடுத்துச் செல்வது கஷ்டம் என்பதால்… சிவனின் கையில் இருக்கும் சூலத்தின் அம்சமாக இருக்கும் ’அஸ்திர தேவர்’ என்ற சூலத்தைத்தான் குளத்துக்குள் எடுத்துச் செல்வார்கள்.
அந்த அஸ்திர தேவரை குளக்கரையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து… அர்ச்சர்களில் ஒருவர் அந்த சூலத்தை எடுத்துக் கொண்டு குளத்தில் இறங்குவார். அவர் சூலத்தோடு மூழ்கி எழுந்திருப்பதுதான் தீர்த்தவாரி. அப்போது சுற்றியிருப்பவர்களும் அந்த குளத்திலோ நீர்நிலையிலோ மூழ்கி எழுவார்கள். இதை புனித நீராடலாக கருதப்படுகிறது,
இதேபோல பெருமாள் கோயில்களிலும் தீர்த்தவாரி நடக்கும். குறிப்பாக மாசி மகம் அன்று பெருமாள் கோயில்களில் இருந்து உற்சவ விக்கிரகங்கள் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கடலில் தீர்த்தவாரி நடைபெறும்.
அப்போது பெருமாள் தன் கையில் ஏந்தியிருக்கும் சுதர்சனம் எனப்படும் சக்கரத்தின் அம்சமான சக்கரத்தாழ்வார்தான் தீர்த்தவாரிக்காக எடுத்துச் செல்லப்படுவார். அதேபோலத்தான் சிவன் கோயிலில் அஸ்திர தேவர் எனப்படும் சூலம் தீர்த்தவாரிக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
*மூவரசம்பட்டு குளத்தில் நடந்தது என்ன?
ஏப்ரல் 5 ஆம் தேதி காலை மூவரசம்பட்டு குளத்துக்கு தர்மலிங்கேஸ்வர் சென்றிருக்கிறார். அவரோடு அஸ்திர தேவர் எனப்படும் சூல விக்ரகமும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. குளக்கரையில் அஸ்திர தேவருக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதன் பிறகு சூலத்தை எடுத்துக் கொண்டு குளத்தில் இறங்கியுள்ளார்கள் அர்ச்சகர்கள். வழக்கமாக இந்த நிகழ்வு குளத்தின் கரையை ஒட்டியே நடக்கும். நடுக் குளத்துக்கெல்லாம் செல்ல மாட்டார்கள்.
ஆனால் இந்த நிகழ்வின்போது தன்னார்வலர்களாக வந்து சிவனை குளக்கரை வரை தூக்கி வந்த இளைஞர்கள் ஆசை ஆசையாக குளத்தில் இறங்கியிருக்கிறார்கள். சென்னையில் இந்தத் தலைமுறையில் யாரும் குளத்தில் குளித்ததில்லை. அதனால் அவர்களுக்கு நீச்சலும் தெரியவில்லை. சிலர் நீச்சல் குளங்களில் பாதுகாப்பான சூழலில் நீச்சல் கற்றுக் கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட வாழ்க்கை முறை கொண்ட இந்த ராகவ், விக்னேஷ், ராகவன், சூர்யா, யோகேஸ்வரன் ஆகிய யாருக்கும் நீச்சல் தெரியவில்லை. மேலும் குளக்கரையிலேயே இருக்க வேண்டிய இவர்கள் உள்ளிட்ட பலர் தீர்த்தவாரி நடக்கும் இடத்தைச் சுற்றி சற்று பெரிய வளையமாக நின்றிருக்கிறார்கள்.
இதுபற்றி சிவாச்சாரியார்கள் சிலரிடம் கேட்டபோது, ‘இதெல்லாம் ஓவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும். பொதுவான பழக்கம் என்பது அஸ்திரதேவர் எனப்படும் சூலத்தை எடுத்துக் கொண்டு குளத்தில் இறங்கி தீர்த்தவாரி செய்துவிட்டு திரும்புவதுதான். சுற்றிலும் வளையம் போல அமைப்பது எல்லாம் ஆர்வ மிகுதியால் செய்வதுதான்.
’உள்ளூர் சுடுகாடும், வெளியூர் ஆறும் பயமுறுத்தும்’ என்பார்கள். உள்ளூர் சுடுகாடு என்றால் யார் யார் அங்கே சென்றிருக்கிறார்கள் என்று உள்ளூர் காரர்களுக்கு தெரியும். அதனால் பயம் அதிகரிக்கும். அதேபோல வெளியூர் குளம், ஆறு என்றாலும் எங்கே ஆழம் இருக்கும், எங்கே சகதி இருக்கும் என்றெல்லாம் தெரியாது என்பதால் பயமாக இருக்கும்.
ஆனால் உள்ளூர்காரர்களாக இருந்தாலும் குளத்தைப் பற்றியோ குளத்தின் இயல்பு பற்றியோ தெரியாத நீச்சல் தெரியாத ஒரு தலைமுறையாக வளர்ந்துவிட்டதால் இந்த பிஞ்சுகளுக்கு குளத்தின் ஆழமும் தெரியவில்லை. அதனால்தான் இப்படி ஒரு விபரீதம் ஏற்பட்டுவிட்டது” என்கிறார்கள்.
சட்டமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு
இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பல்வேறு உறுப்பினர்களின் கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்துப் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “மூவரசம்பேட்டையில் உள்ள குளம் நங்கநல்லூர் கோயிலுக்கு சொந்தமான குளம் அல்ல. அது பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த குளம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி தர்மலிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்கு பக்த ஆஞ்சநேய திருக்கோவிலின் செயல் அலுவலர் தக்கராக நியமிக்கப்பட்டார்.
அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த திருக்கோவிலைச் சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகத்தினர் இதுகுறித்து ஆணையர் அலுவலகத்தில் மேல்முறையீடு மனு அளித்தார்கள். அந்த மனு மீதான விசாரணை வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கிடையே அந்த கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் தாங்களாக முன்வந்து செய்த பணிகளின் காரணமாக தற்போது இந்த துயரமான விபத்து நடந்துள்ளது.
அதில், ராகவன், ராகவா, சூர்யா, விக்னேஷ், யோகேஷ்வரன் என்று 5 விலைமதிப்பில்லா இளைஞர்களின் உயிர்கள் பறிபோயுள்ளன. அவர்களின் பெற்றோரின் கனவுகள் சிதைந்து போயுள்ளன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த மாவட்டத்தின் அமைச்சரை தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின், அதற்கு காரணமானவர்கள் யார் என கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
அந்த குளம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்பதை அறிந்து, குளத்தை ஏன் தூர்வாராமல் வைத்திருந்தீர்கள் என்று என்னை அழைத்து கண்டித்தார்.
கோவில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவதை அந்த கோவில் நிர்வாகத்தினர் யாரும் இந்து சமய அறநிலையத் துறைக்கு தெரிவிக்கவில்லை.
5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதனை இப்போது ஒரு குற்றமாக சொல்ல விரும்பவில்லை. எனினும் இதுபோன்று தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெறும் போது இந்து சமய அறநிலையத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் அமைச்சர் சேகர்பாபு.
நீர் நிலைகள் தொடர் பயன்பாட்டில் இருக்க வேண்டும். சீரிய இடைவெளிகளில் தூர்வாரப்பட வேண்டும். குறிப்பாக நீர் நிலைகளில் நடக்கும் கோயில் நிகழ்வுகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படவேண்டும். அதன் மூலம் இப்படிப்பட்ட கொடிய விபத்துகள் தடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் இதயத் துடிப்பாக இருக்கிறது.
–வேந்தன்
“நிர்வாக ஒழுங்கை கெடுக்கும் பேச்சு”: ஆளுநருக்கு முதல்வர் கண்டனம்!
மீண்டும் முதல்வரின் தனி செயலாளராக அனு ஜார்ஜ்