கிச்சன் கீர்த்தனா: நண்டு பிரட்டல்!
கடல் உணவுகளில் பலருக்கும் பிடித்த உணவு நண்டு. கண்கள், இதயம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் நண்டின் பங்கு அதிகம். உடலின் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நண்டில் அதிகம் இருப்பதால் வீட்டிலுள்ள அனைவருக்கும் ஏற்றதாக இந்த நண்டு பிரட்டல் அமையும்.
என்ன தேவை?
நண்டு – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – ஒன்று
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்.
உப்பு – தேவையான அளவு
அரைக்க…
தேங்காய் – அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
சோம்பு – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
நண்டை சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காயுடன் சோம்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதங்கிய பிறகு தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதித்த பிறகு நண்டுகளைச் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அரைக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்து பச்சை வாசனை போய், நண்டு வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.