ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி தனது கணவர் முருகனை இன்று (நவம்பர் 14) திருச்சி இலங்கை சிறப்பு முகாமில் சந்திக்க சென்றுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏற்கனவே பேரறிவாளன் விடுதலை ஆன நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மீதமிருந்து 6 பேரும் கடந்த 12ஆம் தேதி வெளியே வந்தனர்.
இதில், நளினியின் கணவர் முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சி மத்திய சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் கணவர் முருகனைப் பார்க்க இன்று நளினி திருச்சி சென்றார். சென்னையிலிருந்து ரயிலில் வந்த அவர், ரயில் நிலையத்திலிருந்து காரில் சிறப்பு முகாமிற்குச் சென்றார்.
இந்த சிறப்பு முகாமில் ஏற்கனவே 120க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், தனது கணவருக்குச் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் என்ன மன நிலையில் இருக்கிறார் என்று பார்ப்பதற்காகவும் வந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டு நளினி உள்ளே சென்றுள்ளார்.
முன்னதாக சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என் கணவர் இருக்கும் போது எனக்கு எந்த கவலையும் இல்லை. அவர் என்னை மகாராணி, யாரிடமும் கை ஏந்தக் கூடாது என்பார். இருவரும் எங்கள் மகளுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறோம்.
கணவர் மற்றும் மகளுடன் இங்கிலாந்தில் குடியேறத் திட்டமிட்டுள்ளேன். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
“திமுகவுடன் காங்கிரஸ் ஒன்றுபடுவது இதில் மட்டும்தான்!”- கே.எஸ். அழகிரி
கார்த்தியின் முகநூலில் கேம் விளையாடிய ஹேக்கர்கள்!