“அப்பாவை நினைத்து பிரியங்கா என்னிடம் அழுதார்”: நளினி பேட்டி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான நளினி இன்று (நவம்பர் 13) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

அகதிகள் முகாமில் இருந்து கணவரை விடுவிக்க வேண்டும்!

“எனது கணவர் முருகனுக்கும் எனக்கும் பதிவுத்திருமணம் ஆகியுள்ளது. நாங்கள் இந்தியர்கள். 32 வருடங்கள் அவர் இந்தியாவில் இருந்துள்ளார்.

என்னுடன் அவரை வாழ அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். ஆனால் தற்போது அவரை திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் வைத்துள்ளார்கள். அவரை அங்கிருந்து தமிழக அரசு விடுவிக்க வேண்டும். நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.

எனது கணவரை இங்கிலாந்திற்கு அழைத்து செல்ல, இலங்கை தூதரகத்திற்கு சென்று அவசர விசா மற்றும் பாஸ்போர்ட் வாங்க நாங்கள் முயற்சி மேற்கொண்டிருக்கிறோம்.

என்னுடைய மகள் தந்தையை சந்திக்க வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அவருக்கு இங்கிலாந்தில் கிரீன் கார்டு விசா உள்ளது. இதனால் அம்மா, அப்பா இருவரும் அங்கு சென்று தங்க வாய்ப்பு உள்ளது.

நான் சிறையில் இருந்தாலும் மனதளவில் என்னுடைய குழந்தையுடனும், கணவனுடனும் தான் இருந்துள்ளேன். அவர்களை தான் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பேன். அவர்களுடன் வாழ்ந்தது போன்ற அனுபவம் இருக்கிறது. அது நிஜத்தில் நடக்க வேண்டும்.

எமர்ஜென்சி விசா வாங்கி இங்கிலாந்து சென்று எனது மகளை பார்க்க வேண்டும்.

சிறைக்குள் வாழ்க்கையை முடித்துகொள்ள நினைத்தேன்!

எங்களுக்காக உயிர் கொடுத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்.

ஜெயலலிதா நினைவிடம், கலாம் நினைவிடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது.

நான் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற சம்பவங்களும், தருணங்களும் சிறைக்குள் நிகழ்ந்திருக்கிறது. என்னுடைய வழக்கறிஞர்கள் எனக்கு எப்பொழுதுமே உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

இவ்வழக்கில் 26 பேருக்கும் தூக்குத்தண்டனை கிடைத்தது. வாழ்க்கையே எனக்கு வெறுத்து போனது. அந்த மாதிரி தருணங்கள் நிறைய இருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டானிலை சந்திக்க தயக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன் சந்தித்த போது பிரச்சனை ஆனது. அதுபோல் நான் முதல்வரை சந்தித்தால் பிரச்சனை ஆகிவிடுமோ என்று தயக்கமும் பயமும் இருக்கிறது.

முதலமைச்சரை சந்திக்க முயற்சி செய்வேன். தமிழக முதலமைச்சருக்கு நன்றி சொல்கிறேன். என்னை வைத்து அவரை யாரும் சிக்கலில் சிக்க வைத்துவிடக் கூடாது என்ற பயம் எனக்கு இருக்கிறது. பேரறிவாளனிடமிருந்து நான் பாடம் கற்றுக்கொண்டேன். அதனால் முதலமைச்சரை சந்திக்க நான் தயங்குகிறேன்.

காந்தி குடும்பத்தை பார்ப்பதற்கு எனக்கு தயக்கமாக இருக்கிறது. ராஜீவ் காந்தியை இழந்து விட்டார்கள். அந்த வழக்கில் தான் நான் கைது செய்யப்பட்டுள்ளேன். அவர்கள் மிகவும் வலியில் இருப்பார்கள். அவர்கள் விருப்பப்பட்டால் நான் சந்திக்க தயாராக உள்ளேன்.

சிறையில் சந்தித்த பிரியங்கா காந்தி!

பிரியங்கா காந்தி என்னை சிறையில் சந்தித்தார். அவருடைய அப்பா மரணம் குறித்து என்னிடம் கேட்டார். நான் என்னால் முடிந்ததை சொன்னேன்.

பிரியங்கா காந்தி என்னை சந்தித்தபோது நான் மிகவும் பயந்து விட்டேன். அவர் பத்திரமாக வீடு போய் சேர வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டேன். அவருக்காக நான் விரதம் இருந்தேன்.

அவர் என்னை சந்தித்தபோது மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தார். அப்பாவின் இறப்பின் காயம் அவருக்கு ஆறவே இல்லை. அவர் என்னை சந்தித்தபோது அழுதுவிட்டார்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதால் தான் என்னுடைய விடுதலை சாத்தியப்பட்டிருக்கிறது. அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுதலைக்கு சரியான முன்னெடுப்புகளை எடுத்து வந்தார். இரண்டு பேருக்கும் மிகவும் நன்றி.

எனக்கு பரோல் கிடைத்ததால் தான் இந்த வழக்கை நடத்துவதற்கு நிறைய வேலைகளை செய்ய முடிந்தது. நாங்கள் விடுதலையாவதற்கு அது மிக முக்கியமான விஷயம்.

சிறையில் சந்தித்த கொடுமைகள்!

என்னை முதல் நாள் கைது செய்த போதே தூக்குத்தண்டனை கைதியாக தான் நடத்தப்பட்டேன்.

24 மணி நேரமும் எங்களை சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள். இந்த பெண்ணிற்கு பிரசவம் பார்க்க மாட்டோம். நீங்கள் எப்பொழுதும் இந்த பெண்ணை சிறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள் நடைபயிற்சிக்கு விடவில்லை என்று டாக்டர் சொன்ன பிறகு தான் என்னை சிறையிலிருந்து விடுவித்தார்கள்.

எனக்கு குழந்தை பிறந்த அன்று கூட சிறையில் அடைத்து வைத்தார்கள். நான் மயக்கமாவும், காய்ச்சலுடனும் படுத்துக்கிடந்தேன். டாக்டர்கள் என்னை வந்து பார்த்தபோது, தரையில் படுத்துக்கிடந்தேன். மருத்துவர்கள் என்னை பரிசோதித்து அதன்பிறகு என்னை சிறையிலிருந்து அழைத்து சென்றார்கள். இரவு எனக்கு குழந்தை பிறந்தது.

ராஜீவ் கொலை நடந்த இடத்தில் நான் இல்லை!

குண்டு வெடிப்பில் மக்கள் உயிரிழந்தது மிகவும் வருத்தமானது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராஜீவ் காந்தி இறந்த சம்பவ இடத்தில் நான் இல்லை. இந்திரா காந்தி சிலை அருகில் தான் நான் நின்று கொண்டிருந்தேன். இந்த சம்பவம் நடக்கும் என்று எனக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது.

சிறை ஒரு பல்கலைக்கழகம் அது நிறைய விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது. நான் யாரிடமும் அதிகமாக பேச மாட்டேன். நிதானம், பொறுமை, அனுசரித்து செல்லுதல், என பல விஷயங்களை நான் சிறையில் கற்றுக்கொண்டேன்.

எனது கணவர் முருகன் நான் சிறையிலிருந்து வெளியேறியது பெரிய அதிசயம் இன்னும் சில நாட்கள் சிறையில் இருப்பேன் என்று தான் நினைத்தேன் என்று என்னிடம் தெரிவித்தார்.

தவறு செய்யாத எனக்கு தண்டனை!

என் மீது சிறையில் எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை. சிறையில் செல்போன் பயன்படுத்தியதாக ஒரு வழக்கு இருந்தது. ஜெயலலிதா இருந்தபோதே அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. என் மீது எந்தவிதமான குற்றச்சாட்டும் சிறையில் வைக்கவில்லை.

இந்த வழக்கில் எனக்கு தூக்குத்தண்டனை விதித்தார்கள். எப்பொழுதும் நான் அழுதுகொண்டே தான் இருப்பேன்.

செய்யாத தவறுக்கு சிறை கைதி உடையுடன் நான் தண்டனை வாங்கியிருக்கிறேன் என்பதை நினைத்து பார்த்தால் கொடூரமாக இருக்கிறது. சிறையில் நான் எனது படிப்பை துவங்கியதும் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

மேலும், வழக்கை எதிர்கொள்ளும் மன நிலையும் மாறியது. எம்.சி.ஏ டிகிரியில் ஒரு பாடத்தில் நான் 198 மதிப்பெண் எடுத்துள்ளேன்.

டெய்லரிங், பெயிண்டிங், சாரி டிசைனிங் ஆகியவை நான் சிறையில் படித்துள்ளேன்.” என்று நளினி தெரிவித்தார்.

செல்வம்

சிறையை விட கொடிய சிறப்பு முகாம்: 4 பேருக்கு நடந்தது என்ன?

மழையின் தீவிரம் : வானிலை அப்டேட்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts