பேரறிவாளன் விடுதலை வழக்கின் தீர்ப்பில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டி தன்னையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டி நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவிற்கு மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரில்,
பேரறிவாளனை மட்டும், உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கடந்த மே மாதம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
அவ்வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.
மேலும் மாநில அரசு ஏழு பேரையும் விடுவிக்கக் கோரி அனுப்பிய தீர்மானத்தில் முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியதால், அதன் பலனை மனுதாரரான பேரறிவாளனுக்கு வழங்கியது.
இவ்விவகாரத்தில் விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இவற்றை மேற்கோள் காட்டி, தங்களையும் விடுவிக்க வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் மாதம் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் பி.வி. நாகரத்னா அடங்கிய அமர்வு, நளினி மற்றும் ரவிச்சந்திரனின் மனுவிற்குப் பதில் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
மேலும் இவ்வழக்கின் விசாரணை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய 2018 ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
வினோத் அருளப்பன்
பாஜக ஆர்ப்பாட்டம் : கோவையில் போக்குவரத்து மாற்றம்!