நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கும் உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என்று தமிழ்நாடு அரசு பதில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் கடந்த மே மாதம் 18ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
உச்ச நீதிமன்றம் தன்னுடைய சட்டப்பிரிவு 142 சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.
இதைத்தொடர்ந்து ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் விடுதலை கோரி மனு தாக்கல் செய்தனர்.
அதில், ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனின் நன்னடத்தை பற்றியும், பரோல் மூலம் வெளியே வந்த போது சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொண்டார் என்றும் நீதிமன்றம் மேற்கோள் காட்டியது.
அதுபோல தாங்களும் அதேநிலையில் உள்ளதாகவும் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இந்த வழக்கில் விடுதலை செய்யும் வரை தங்களுக்கு இடைக்காலமாக ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தெரிவித்திருந்தனர்.
இவ்வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய் மற்றும் நாகரத்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு மற்றும் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் நளினி, ரவிச்சந்திரன் தங்களை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீது தமிழ்நாடு அரசு இன்று(அக்டோபர் 13 ) பதில் மனுதாக்கல் செய்துள்ளது.
தண்டணை பெற்றவர்களை விடுதலை செய்யக்கோரி அமைச்சரவை எடுத்த முடிவு மீது ஒப்புதல் அளிக்காமல், ஆளுநர் காலம் தாழ்த்தியதை காரணமாகக் குறிப்பிட்டு பேரறிவாளன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
அதேபோல இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் கட்டுப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மீது இரண்டரை ஆண்டுகள் எந்த முடிவும் எடுக்கவில்லை.
பின்னர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குடியரசு தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். ஒரு வருடம், ஒன்பது மாதங்களாகியும் குடியரசுத் தலைவர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார் என்றும் தமிழ்நாடு அரசு பதில் மனுவில் கூறியுள்ளது.
கலை.ரா
தேவர் குருபூஜைக்கு மோடி வரும் திட்டம் இல்லை: அண்ணாமலை
நயன் – விக்னேஷ் சிவன் குழந்தை விவகாரம்: விசாரணை தொடக்கம்!