அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது தொடரப்பட்ட மோசடி வழக்கினை ஆரம்பத்திலிருந்தே விசாரித்து வந்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதியை, இரவோடு இரவாக(16/08/2023) இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த பணிமாற்றம் தற்போது மிகப்பெரிய அதிருப்தியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. இச்செய்தியின் கிளையாக, திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, செந்தில் பாலாஜி வழக்கின் காரணமாக நாகஜோதி நடத்தப்பட்ட விதம் குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
கடந்த ஜூன் மாதம், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக சைலேந்திரபாபு இருந்தபோது தலைமைச் செயலகத்தில் செந்தில்பாலாஜி வழக்கு விசாரணை தொடர்பாக நடந்த கூட்டத்தில் பங்கேற்ற நாகஜோதி, ‘இந்த வழக்கில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது. உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்படி முறையாக வழக்கை நடத்துவேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே உயரதிகாரிகளின் கண்டனத்தையும் பல்வேறு சிக்கல்களையும் சந்தித்திருக்கிறார் நாகஜோதி. ஜூலை மாதத்தில் அவரை விடுப்பு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தொடர்ந்து தனது பணியை சிரத்தையோடு மேற்கொண்டு வந்த நாகஜோதி, இரவோடு இரவாக மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த நாகஜோதி?
ஓர் அதிகாரியின் நேர்மையைக்கண்டு, அரசாங்கமே அதிரக் காரணமென்ன? ஏன் இந்த அவசர பணிமாற்றம்? இக்கேள்விகளுக்கு விடை காண, நாகஜோதி கடந்து வந்த பாதைகளையும் பயணங்களையும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது.
மிகவும் நேர்மையானவர் என்று அதிகாரிகள் வட்டாரங்களில் பெயரெடுத்தவர் நாகஜோதி. குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருப்பினும், எவ்வளவு பெரிய பதவியில் இருப்பினும், அவர்தம் குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, எந்தவித பாரபட்சமும் இல்லாமல் விசாரணை நடத்தக்கூடியவர்.
உதாரணமாக இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடலாம்.
சம்பவம் 1 :
இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில், 19.2.2020 அன்று இரவு 9 மணியளவில் ராட்சத கிரேன் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர், 9 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்த விசாரணையின்போது, மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 3 அன்று நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு வேப்பேரியிலுள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் அவர் விசாரணைக்காக ஆஜரானார்.
இந்த வழக்கை விசாரித்தவர் நாகஜோதி. நடிகர் கமலஹாசன் நேரில் ஆஜராக வழங்கப்பட்ட நேரம் காலை 10.30 மணி. அவர் 10.15 மணிக்கெல்லாம் அலுவலகம் வந்து சேர்ந்தார்.
சரியாக 10.30 மணிக்கு அவரை அழைத்தார் நாகஜோதி.
’நான் 10.15 மணிக்கே வந்துட்டேன்’ என்று கமலஹாசன் கூறியபோது, ‘உங்களுக்கு வழங்கப்பட்ட நேரம் 10.30 மணி தானே..’ என்று கடிதத்தைக் காட்டியுள்ளார் நாகஜோதி.
மேலும், ‘உங்கள் பெயர் என்ன?’ என்று அவர் எழுப்பிய கேள்வியில் அதிர்ந்தார் கமலஹாசன்.
’உங்கள் பெயர் என்ன?’
‘கமலஹாசன்’
’உங்க அப்பா பேரு’
’ஸ்ரீனிவாசன்’
’உங்க சொந்த ஊர்?’
‘பரமக்குடி’
‘என்ன தொழில்?’
‘நடிகரா இருக்கேன்’
இதன் உச்சமாக, ‘இந்தியின் 2 படப்பிடிப்பு தளத்தில் உங்கள் வேலை என்ன?’ என்று கேட்டார் நாகஜோதி.
‘அந்த படத்தோட ஹீரோவா நான் நடிக்கிறேன்’ என்று பதிலளித்த கமலஹாசன், இதுபோன்ற கேள்விகளை எதிர்பார்த்திருக்கவில்லை.
‘படப்பிடிப்புத் தளத்தில் எப்படி விபத்து ஏற்பட்டது?’ என்ற கேள்விக்கு கமலஹாசன் இயந்திரக்கோளாறு என்று பதிலளிக்க,
’கிரேன் ஆப்பரேட்டரை விசாரிச்சோம். ஹெவி வெயிட் இருந்தனால, அதுக்கு மேல லிஃப்ட் பண்ண முடியலனு உங்க கிட்ட கிரேன் ஆப்பரேட்டர் சொல்லியிருக்கிறார். இதுக்குமேல லிஃப்ட் பண்ணா, வண்டியே மேல தூக்குதுன்னு சொல்லியிருக்கார். ஆனா, மானிட்டர் பாத்துட்டு இருந்த நீங்க, அடுத்த ஷாட்க்கு நேரம் ஆச்சுன்னு, அவரை இறங்க சொல்லிட்டு வேற ஒரு லிஃப்ட் ஆப்பரேட்டரை வெச்சு அந்த கிரேனை இயக்கியிருக்கீங்க..’,னு தெளிவாக சம்பவங்களை அடுக்கினார் நாகஜோதி. மிரண்டுபோன கமலஹாசன், இதன் பிறகான கேள்விகளுக்கு விரிவான பதிலளித்தார்.
சம்பவம் 2 :
செந்தில் பாலாஜி வழக்கின் பின்னணியிலும் இதுபோன்றதொரு அணுகுமுறையைத்தான் கடைப்பிடித்தார் நாகஜோதி. குறிப்பாக, செந்தில் பாலாஜி வழக்கில் அவர் தீவிரமாக ஈடுபட்டதற்கு காரணமாக இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிடலாம்.
வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, வேலைவாய்ப்புப் பணிக்காக நேர்காணல் செய்யப்பட்டவர்களை விசாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர், குற்றப்பிரிவு ஐ.ஜி ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான விசாரணை அதிகாரிகள்.
இந்நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் விசாரணைக்காக வந்திருந்தார். அவர் டிப்ளமோ (DME) படித்துவிட்டு, BE முடித்தவர். வாழ்க்கையில் கல்வியின் மூலம் முன்னேற்றம் காணமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தவர். உடல் இயக்க குறைப்பாடு கொண்டிருந்த அந்த மாற்றுத்திறனாளியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
’உங்களுக்கு ஏன் பணி மறுக்கப்பட்டதுன்னு தெரியுமா?’ என்று கேட்டனர் விசாரணை அதிகாரிகள்.
‘நல்லாதாங்க தயாராகிட்டுதான் போனேன்.. வெறும் 3 மார்க்தான் வாங்குனேன்னு சொல்லி நிராகரிச்சுட்டாங்க.’ என்றார் அவர்.
’உங்க உண்மையான மார்க் என்ன தெரியுமா?’ என்று கூறிக்கொண்டே.., ரெய்டில் கைப்பற்றிய ஆவணத்தில், 75 என்று பென்சிலில் எழுதி, பின்னர் திருத்தப்பட்டு 3 என்று இருந்த அவரது மதிப்பெண்ணைக் காட்டுகின்றனர்.
‘75 மார்க் வாங்கியிருக்கீங்க..’ என்று அதிகாரிகள் தெரிவிக்க, அதை தெரிந்துகொண்ட அந்த மாற்றுத்திறனாளி இளைஞர், தனது சக்கர நாற்காலியில் இருந்து கீழே விழுந்து கதறி அழுகிறார்.
‘இவ்ளோ படிச்சிட்டு… நல்லா இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணேன்.. அவங்க கேட்ட பணத்த குடுக்க முடியாததுனால.. கிடைச்ச வேலைகளை செஞ்சுகிட்டு காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கேன்..’ என்று தேம்பித் தேம்பி அழுதார் அவர்.
தகுதியான நபர்களுக்கு முறையாக கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்புகள் கிடைக்காததை அறிந்து வருந்திய விசாரணை அதிகாரிகள், அதன்பிறகான நாட்களில் இவ்வழக்கில் கூடுதல் கவனம் செலுத்தினர். பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும், இவ்வழக்கின் முக்கிய ஆதாரங்களை மிகுந்த சிரத்தையுடன் திரட்டினர்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது, செந்தில் பாலாஜி தொடர்புடைய பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தினர் விசாரணைக் குழுவினர். அப்போதே செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக், ரெய்டு செய்த டி.எஸ்.பி யிடம் ‘அடுத்து திமுக ஆட்சிதான்.. எதுக்கு பிரியோஜனம் இல்லாத இந்த வேலைகளை பண்ணிட்டு இருக்கீங்க? இப்போதான் கமிஷனரை பாத்துட்டு வந்தோம்.. ஆட்சிக்கு வந்ததும் எல்லாம் காணாம போயிடும்’, என்று மிரட்டும் தொனியில் கூறியுள்ளார்.
இவை அனைத்தையும் அறிந்திருந்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, தொடர்ந்து இம்முறைகேட்டினை வெளிக்கொண்டுவர ஈஸ்வரமூர்த்தி தலைமையில் முறையான விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக, இந்த வழக்கின் அனைத்து ஆதாரங்களையும் முறையாக திரட்ட தொடர்ந்து வேலை செய்தார் நாகஜோதி.
அன்று அசோக் மிரட்டியதைப் போலவே, இன்று அவர் ‘காணாமல்’ செய்யப்பட்டுவிட்டார். விசாரணை அதிகாரியாக திறமையாக செயல்பட்ட ஒருவருக்கு ஆவணக் காப்பக எஸ்.பி பதவியென்பது தண்டனையா, பரிசா என்ற கேள்வியெழுந்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்கீழ்தான் இவ்விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் விசாரணை அதிகாரிகள். இந்நிலையில் அன்று செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நாகஜோதி, இப்போது பணிமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் உச்சநீதிமன்றத்தில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
ஜெயிலருக்கு டிக்கெட்டு… அப்போ மாநாட்டுக்கு… அதாம்ல இது!: அப்டேட் குமாரு
பிரபாகரன் மனைவியும், மகளும் உயிருடன் உள்ளனரா?: இலங்கை அரசு மறுப்பு!