அயலகத் தமிழர்களுக்காக துவக்கப்பட்ட ‘எனது கிராமம்’ திட்டம்: சிறப்பு என்ன?

Published On:

| By christopher

My Village Scheme for Tamil diaspora

“அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில் அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை வழங்கி, ‘எனது கிராமம்’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) தொடங்கி வைத்துள்ளார்.

திமுக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஒவ்வொரு ஆண்டும் அயலகத் தமிழர் தின விழாவை நடத்தி வருகிறது.

அதன்படி 3வது ஆண்டாக தற்போது சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் ‘தமிழ் வெல்லும்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு “அயலகத் தமிழர் தினம் 2024” இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர். துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து 1400-க்கும் மேற்பட்ட தமிழ் வம்சாவளியினர், அமைச்சர் பெருமக்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Image

முதல் நாள் நிகழ்ச்சிகள்:

முதல் நாளான நேற்று (ஜனவரி 11) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அயலகத் தமிழர் தின விழாவைத் தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட அயலக தமிழர் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தார். இதில், சிறப்பு நிகழ்ச்சியாக கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அயலகத் தமிழர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் தலைமையில் கலந்துரையாடல் கருத்தரங்கம் நடைபெற்றது.

எனது கிராமம் திட்டம்!

இரண்டாம் நாளான இன்றைய அயலகத் தமிழர் தினம் விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘எனது கிராமம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் அயலகத் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து இத்திட்டத்தின் வாயிலாக செயல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் நாட்டு உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா. சண்முகம் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.

My Village Scheme for Tamil diaspora

அதன்பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வாக, ‘வேர்களை தேடி’ திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா, கனடா, ஃபிஜி, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 57 அயலகத் தமிழ் மாணவர்கள் தங்களது பண்பாட்டு சுற்றுலா சென்ற
அனுபவங்களை பகிர்ந்தனர்.

விருது வழங்கி கெளரவிப்பு!

அதனை தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட அயலகத் தமிழர்களுக்கு தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர் நலன், வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட அயலகத் தமிழர்களுக்கான விருது, தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டு பட்டயத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

My Village Scheme for Tamil diaspora

அதன் விவரம் பின்வருமாறு :

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு –  டாக்டர் சுதாகர் பிச்சைமுத்து (இங்கிலாந்து)

தமிழ் இலக்கியப் பிரிவு – சுப்பிரமணியன் தின்னப்பன் (சிங்கப்பூர்), வைதேகி ஹர்பேர்ட் (அமெரிக்கா)

மருத்துவப் பிரிவு –  ஜெயராம் லிங்கமாணிக்கர் (சிங்கப்பூர்)

கல்விப் பிரிவு – பால சுவாமிநாதன் (அமெரிக்கா), முருகேசு பரமநாதன் (ஆஸ்திரேலியா) 

சமூக மேம்பாட்டுப் பிரிவு – டத்தோ எம். சரவணன் (மலேசியா)

மகளிர் பிரிவு – சித்ரா மகேஷ் (அமெரிக்கா), ஜெசிலா பானு (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) 

விளையாட்டுப் பிரிவு – ராமன் குருசாமி (தென் கொரியா), சரண்யா தேவி (குவைத்)

வணிகப் பிரிவு – பக்கிரிசாமி ராஜமாணிக்கம் (அமெரிக்கா), சையது முகமது சலாவுதீன் (மலேசியா) 

கவனம் ஈர்த்த கண்காட்சி அரங்குகள்!

அயலகத் தமிழர் தின விழாவில், தமிழர் நலனை விளக்கும் விதமாக அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் அரங்குகளும், தமிழர் கலை பண்பாடு மற்றும் வணிகத்தை விளக்கும் அரங்குகளும், தமிழின் தொன்மை மற்றும் தொடர்ச்சி குறித்து தமிழ்நாடு பாடநூல் கழகம். தமிழ் வளர்ச்சித் துறை. தமிழ் தொல்லியல் துறை, தமிழ் இணையக் கழகம் ஆகியவற்றின் சார்பில் அரங்குகளும், இலங்கை தமிழ் கலை கண்காட்சி அரங்குகளும், சர்வதேச தமிழ் சங்கங்களால் அமைக்கப்பட்ட அரங்குகளும், தமிழர் மரபு மற்றும் பண்பாடுகளை விளக்கும் வகையில் இடம்பெற்றன.

இவற்றுடன் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து செயல்படுத்தும் “நான் முதல்வன் திட்டம்” மற்றும் சிப்காட், வழிகாட்டி நிறுவனம் (Guidance Bureau), டிட்கோ. சிட்கோ உள்ளிட்ட துறைகளின் காட்சி அரங்குகளும் இடம்பெற்றன.

சுற்றுலா வளர்ச்சித் துறை மற்றும் பூம்புகார், தமிழ் வளர்ச்சித் துறை, கோ-ஆப்டெக்ஸ், அயலக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் காட்சி அரங்குகளும் இடம்பெற்றன.

மேலும், வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வதற்கான வசதி வாய்ப்புகள் குறித்து விளக்கிட ஸ்டார்ட் அப். டிஎன் ஃபேம் ஆகியவற்றின் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தது.

My Village Scheme for Tamil diaspora

விழாவில் பங்கேற்ற ஆளுமைகள் விவரம்!

இந்த விழாவில், சிங்கப்பூர் நாட்டு உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா. சண்முகம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், மலேசியா நாட்டு சட்டம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை துணை அமைச்சர் எம். குலசேகரன், இலங்கை நாட்டின் கிழக்கு மாகாண ஆளுநர் எம். செந்தில் தொண்டமான். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மலேசியா நாட்டு முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் சதாசிவம், கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி, இங்கிலாந்து நாட்டின் அமஸ்பரி மேயர் சாருலதா மோனிகா தேவேந்திரன், ஆஸ்திரேலியா நாட்டின் ரிவர்டன் உறுப்பினர் டாக்டர் ஜெகதீஷ் கிருஷ்ணன், சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். ரவீந்திரன், டர்பன் முன்னாள் துணை மேயர் லோகி நாயுடு. Zoom Technology தலைவர் வேல்சாமி சங்கரலிங்கம், அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தில் பயணிக்க ’கட்டணம்’ அறிவிப்பு!

பிரபாஸின் கல்கி 2898 AD ரிலீஸ் தேதி எப்போது?

தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு!