ஸ்டார் ஹோட்டல்களில் சிறந்த சமையற்காரர்களால் உருவாக்கப்படும் பாஸ்தா உணவுகளுக்கு அடிமையானவர்கள் பலருண்டு. நீங்களும் இந்தத் தலைக்கறி பாஸ்தா செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம். பாராட்டுகளை அள்ளலாம்.
என்ன தேவை?
ஆட்டின் தலைக்கறி – அரை கிலோ
பாஸ்தா – 500 கிராம்
வெங்காயம் – 500 கிராம்
லவங்கம், பட்டை – சிறிதளவு
ஏலக்காய் – 4
கிராம்பு – 4
தக்காளி – 300 கிராம்
பூண்டு விழுது – 100 கிராம்
இஞ்சி விழுது – 50 கிராம்
தயிர் – 5 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 100 மில்லி
கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
கல் உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடானதும் கிராம்பு, லவங்கம், பட்டை, ஏலக்காய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி மற்றும் பூண்டு விழுதுகள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அத்துடன் சுத்தம் செய்யப்பட்ட தலைக்கறியைச் சேர்த்து மூன்று நிமிடங்கள் வேகவைத்து அத்துடன் சிறிதளவு உப்பு, நறுக்கிய தக்காளி, தயிர், எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி, புதினா, மிளகாய்த்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும். பிறகு குக்கரில் வைத்து, மூன்று விசில் வரும் வரை காத்திருக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து ஒரு லிட்டர் தண்ணீர் சேர்க்கவும். கொதித்ததும் பாஸ்தாவைச் சேர்த்து மேலும் ஒரு விசிலுக்குக் காத்திருக்கவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு குக்கரைத் திறந்து, சுவை யான தலைக்கறி பாஸ் தாவை சூடாகப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…