ஆட்டிறைச்சி உணவுகள் நம் உடலில் அதிக புரதத்தைச் சேர்க்க உதவும் நிலையில் மூட்டுவலி, முதுகுவலி, மூட்டு தேய்மானம் போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கு இந்த எலும்பு ரசம் நல்ல பலன் தரும். கலோரி கட்டுப்பாட்டுக்கும் உதவும் இந்த எலும்பு ரசம் சளி, இருமலுக்கும் ஏற்றது.
என்ன தேவை?
நெஞ்செலும்பு, கொழுப்பு, நல்லி (அனைத்தும் சேர்த்து) – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 5
தக்காளி – 2
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
எலுமிச்சைப்பழம் – ஒன்று
அரைக்க…
பூண்டு – 5 பல்
காய்ந்த மிளகாய் – 5
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
தாளிக்க…
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எப்படிச் செய்வது?
சுத்தம் செய்த எலும்பு, கொழுப்பு மற்றும் நல்லி இவற்றை குக்கரில் சேர்த்து இதனுடன் மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். இதில் மட்டன் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு 4 விசில் விட்டு வேக விடவும்.
அரைக்க வேண்டியதை ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். மட்டனையும் அது வெந்த தண்ணீரையும் தனியாகப் பிரித்து வைக்கவும். மட்டன் வெந்த தண்ணீரில் அரைத்தவற்றைச் சேர்த்து அத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி விடவும்.
இதில் தாளிக்க வேண்டியதைச் சேர்த்துத் தாளித்துக் கொட்டி, எலுமிச்சைச்சாற்றைப் பிழிந்துவிட்டு இறக்கவும். விருப்பப்பட்டவர்கள் ரசத்தில் வேக வைத்த கொழுப்பு மற்றும் நல்லியைச் சேர்த்து சாப்பிடலாம்