குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் திருக்கோவிலில் நடைபெறும் தசரா திருவிழாவானது புகழ்பெற்றது. மைசூரில் நடைபெறும் தசரா திருவிழாவிற்கு அடுத்தபடியாக வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாவாகும்.
முத்தாரம்மன் திருக்கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தசரா திருவிழா துவங்கியது. இன்று முதல் அக்டோபர் 26-ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மாலையணிந்து வேடமிட்டு அம்மனை தரிசிப்பர். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ஆம் திருவிழா அக்டோபர் 24-ஆம் தேதி அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. அக்டோபர் 25-ஆம் தேதி வேடம் அணிந்த பக்தர்கள் காப்புகளை களைந்து விரதத்தை நிறைவு செய்கிறார்கள். அக்டோபர் 26-ஆம் தேதி அம்மனுக்கு சிறப்பு பாலபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
தசரா திருவிழாவை முன்னிட்டு 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குலசேகரன்பட்டினத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செல்வம்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
பாகிஸ்தான் வீரருக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் கோஷம்: உதயநிதி கண்டனம்!