கோவை காவல் தெய்வம் கோனியம்மன் தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பூச்சாற்று விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 21 ஆம் தேதி கொடியேற்றமும் அக்னி சாற்று நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கிளி வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், புலி வாகனம் உள்ளிட்டவற்றில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று (பிப்ரவரி 28) நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண நிகழ்ச்சியைப் பார்த்து அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து இன்று (மார்ச் 1) தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது.
கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக கருதப்படும் இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதியம் நேரத்தில் தேரோட்டம் நடைபெற்ற பகுதியில் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில் வழங்கியுள்ளனர். பக்தர்களும் இஸ்லாமியர்கள் வழங்கிய தண்ணீர் பாட்டில்களை வாங்கி சென்றனர்.
இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத பிரச்சனைகள் அதிகளவு நடைபெறும் ஒரு இடமாக கோவை நகரம் பார்க்கப்படுகிறது. ஆனால் தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில்கள் வழங்கியது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்திருக்கிறது.
மோனிஷா
தொடங்கியது ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!
சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து: ஒரு மணி நேரமாக போராடும் தீயணைப்பு வீரர்கள்!