ஹைதராபாத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தால்ச்சா, இன்று இந்தியா முழுக்க.. குறிப்பாக, முஸ்லிம் வீட்டுத் திருமணங்களில் பிரியாணியுடன் வழங்கப்படும் முக்கிய உணவாக இடம்பெற்று வருகிறது. இதை நீங்களும் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.
என்ன தேவை?
துவரம்பருப்பு – 2 டம்ளர்
புளி – எலுமிச்சை அளவு
பட்டை – ஒன்று
கிராம்பு – 2
நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
நறுக்கிய தக்காளி – 2
நறுக்கிய பச்சை மிளகாய் – 3
கத்திரிக்காய் – 3
செளசெள – ஒன்று (சிறியது)
உருளைக்கிழங்கு – 2
வாழைக்காய் -2
மாங்காய் – ஒன்று (சிறியது)
மட்டன் – கொழுப்பு மற்றும் எலும்புடன் கூடிய 10 துண்டுகள்
இஞ்சி – பூண்டு விழுது – 3 டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய் – கால் கப் (விழுதாக அரைக்கவும்)
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – எல்லாம் சேர்ந்து ஒரு கைப்பிடி
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
சிக்கன் அல்லது மட்டன் மசாலாத்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படி செய்வது?
கத்திரிக்காய், செளசெள, உருளைக்கிழங்கு, வாழைக்காய், மாங்காய் ஆகிய காய்களை நடுத்தர அளவில் நறுக்கிக்கொள்ளவும். குக்கரில் மட்டன் துண்டுகளைப் போட்டு அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து ஐந்து விசில் விட்டு வேகவைத்துக் கொள்ளவும்.
பருப்பை நன்கு கழுவி குக்கரில் 3 டம்ளர் தண்ணீர்விட்டு இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். புளியை தனியாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி பட்டை, கிராம்பு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இதனுடன் கொடுக்கப்பட்டுள்ள மசாலாப் பொடிகள் அனைத்தையும் சேர்த்துக் கிளறவும்.
பின்னர் இதில் நறுக்கிவைத்த காய்கறிகள், வேக வைத்த மட்டன் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். காய்கறிகளின் நிறம் மாறி அவை நன்றாக வதங்கியவுடன் கரைத்து வைத்த புளி, வேகவைத்த பருப்பு, தேவையான அளவு உப்பு, அரைத்த தேங்காய் விழுதை அதில் சேர்க்கவும்.
அத்துடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். கலவை நன்றாகக் கொதித்தவுடன் அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா தூவி அடுப்பை அணைத்து விடவும். சூடான சுவையான தால்ச்சா ரெடி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: நெய்ச் சோறு
கிச்சன் கீர்த்தனா: வெள்ளை குருமா