தலையாரி தேர்வில் உருளும் தாசில்தார் தலை: அமைச்சர் நேரு மாவட்டத்தில் சலசலப்பு!

தமிழகம்

கிராம உதவியாளர் எனப்படும் தலையாரி பணி நியமனம் குறித்த சர்ச்சைகள் அரசியல்வாதிகளை மையமாக வைத்து தொடங்கி, இப்போது அதிகாரிகளை மையமாக வைத்து வலுவாக பேசப்படுகின்றன.

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி 2,748 தலையாரி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த பணியிடங்களுக்கு மாதம்தோறும் ரூ.15 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கட்சித் தொண்டர்கள், கீழ் நிலை நிர்வாகிகளுக்கு எந்த பலனும் இல்லை என்ற புலம்பல் அதிகமானது. இது முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கும் சென்றது. இந்த நிலையில் தலையாரி பணியிடங்களை திமுகவின் கிளைச் செயலாளர்களின் உறவினர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று திமுக தலைமையில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேநேரம், பல மாசெக்கள், அமைச்சர்கள், எம்.எல்.எல்.ஏ.க்கள் தங்கள் கட்சிக்காரர்களுக்கு தலையாரி பணியிடங்களைக் கொடுப்பதற்காக ரகசிய வசூலிலும் ஈடுபட்டனர்.

இந்த பின்னணியில் பொங்கலுக்கு முன்னதாக தென்காசி, கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் தலையாரி பணி நியமன பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டனர். அவற்றில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பரிந்துரைத்த கட்சிக்காரர்களின் பெயர்களே இல்லை. இதனால் திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மின்னம்பலத்தில் திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் தந்த பொங்கல் ஷாக் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

தென்காசி, கோவை, நெல்லை மாவட்டங்களைத் தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் வெளியான முடிவிலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கொடுத்த பட்டியலில் இருந்தவர்கள் ஒருசிலரைத் தவிர வேறு யாரும் பணி நியமனம் செய்யப்படவில்லை. பல கலெக்டர்கள், தாசில்தார்கள் உதவியுடன் பலமான வசூல் செய்து தலையாரி பணி நியமன ஆணைகளை வெளியிட்டுள்ளனர் என குமுறினார்கள் திமுக நிர்வாகிகள். சில மாவட்டங்களில் அமைச்சர்களின் உதவியாளர்கள் பணம் பெற்றுக்கொண்டு கொடுத்த சில போஸ்டிங்குகளையும் மாற்றுக் கட்சியினருக்குக் கொடுத்ததால் கட்சி நிர்வாகிகள் அமைச்சர்கள் உதவியாளர்களை தொடர்புகொண்டும் வறுத்தெடுத்தனர்.

அதுதொடர்பான அதிர்ச்சி ஆடியோக்களும் வெளியாகின. இதுகுறித்து மின்னம்பலத்தில், ’தலையாரி’ நியமனத்தில் விளையாடியது யார்? கொதிக்கும் தொண்டர்கள்… திணறும் அமைச்சர்கள்! அதிர்ச்சி ஆடியோக்கள்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அமைச்சர்களால் முடியாததையும், வட்டாட்சியர்களைப் பிடித்து சிலர் காரியத்தைச் சாதித்துள்ளனர். இதையடுத்து பாக்கியுள்ள மாவட்டங்களில் இன்னும் பணி நியமனப் பட்டியல் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் மூத்த அமைச்சரான நேருவின் திருச்சி மாவட்டத்தில் முசிறி தாசில்தார் பணம் வாங்கிக்கொண்டு தனது கார் ஓட்டுநரின் தம்பிக்குப் பணி நியமன ஆணையை வழங்கியிருக்கிறார் என்று சர்ச்சை எழுந்துள்ளது.

musiri Tahsildar received money

இதுகுறித்து முசிறி திமுக வட்டாரத்தில் பேசினோம்.

”திருச்சி மாவட்டத்துக்கான தலையாரி தேர்வு முடிவு பிப்ரவரி 15 வெளியானது. இந்த ரிசல்ட் பட்டியலில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கொடுத்த லிஸ்ட்டில் இருந்தவர்கள் பேர் வரவில்லை. ஆனால் திருச்சி மாவட்டம் முசிறி தாசில்தாராக இருக்கும் சண்முகப்பிரியாவின் கார் ஓட்டுநர் பாலு என்கிற பால சுப்பிரமணியன் தம்பி பிரவீன் குமார் தலையாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜம்புமடை வருவாய் கிராம உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாலசுப்பிரமணியனிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு பிரவீன் குமாருக்கு தலையாரி வேலையை ஒதுக்கியிருக்கிறார் தாசில்தார் சண்முகப்பிரியா. இதற்கு தாசில்தார் அலுவலகத்தில் வேலை செய்யும் மூத்த எழுத்தர் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார்.

தகுதியான தேர்வர்கள் இருந்தும் அவர்களைக் காட்டிலும் தேர்வு முடிவில் கடைசியிலிருந்த பிரவீன் குமாருக்கு வேலை வழங்கியிருப்பது தகுதியான பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இவ்விவகாரத்தில் கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட்டுக்கு போகவும் சிலர் தயாராகிவிட்டனர்.

மூத்த அமைச்சரான நேருவின் சொந்த மாவட்டம் இது. இங்கேயே மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ.க்கள் கொடுக்கும் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்காமல், தாசில்தார் சொல்வதுதான் நடந்திருக்கிறது. இதெல்லாம் மாவட்ட அமைச்சர் நேருவுக்குத் தெரியுமா தெரியாதா?” என்று புலம்புகின்றனர் திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகள்.

திமுக ஆட்சியில் அரசியல்வாதிகளை விட, அதிகாரிகளே பவர்ஃபுல் ஆக இருக்கிறார்கள் என்பதற்கு முசிறி இன்னொரு உதாரணம் ஆகியுள்ளது.

-பிரியா

கிச்சன் கீர்த்தனா: கலர்ஃபுல் லெமன் ரைஸ்!

குடியரசுத் தலைவர் தமிழ்நாடு வருகை: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

+1
0
+1
0
+1
1
+1
3
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *