குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு புலாவ். இந்த காளான் புலாவில் செலினியம் மற்றும் பொட்டாசியம் சத்துகள் அதிக அளவில் உள்ளன. அவை, வைரஸ் கிருமிகளிடமிருந்து குழந்தைகளைக் காக்கும். தொற்றுநோய்க் கிருமிகளின் பரவலைத் தடுக்கும். இதில் உள்ள வைட்டமின் டி, குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ரிக்கெட்ஸ் (Rickets) எனப்படும் எலும்பு முறிவு நோய் வராமல் தடுக்கும். இந்த புலாவை மதிய உணவாகவும் கொடுத்து அனுப்பலாம்.
என்ன தேவை?
பாசுமதி ரைஸ் – 200 கிராம்
காளான் – ஒரு கப் (பட்டன் காளான்)
நெய், எண்ணெய் – தலா 2 டீஸ்பூன்
சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
கறுப்பு மிளகுத்தூள் – 2 சிட்டிகை
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
காளானைச் சுத்தமாகக் கழுவிச் சிறிய துண்டுகளாக நறுக்கவும். பாசுமதி அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்துக் களையவும். குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, காளான், இஞ்சி – பூண்டு விழுது, உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் சோயாசாஸ், வெள்ளை மிளகுத்தூள் சேர்க்கவும். ஒரு பங்கு அரிசியில் 2 பங்கு தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். பிறகு, அரிசி சேர்த்துக் கலந்து மூடி 2 விசில் விட்டு இறக்கவும். மேலே மிளகுத்தூளை லேசாகத் தூவி பரிமாறவும்.
கிச்சன் கீர்த்தனா: சென்னா ரைஸ்