ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். murder of rowdy Vasool Raja
காஞ்சிபுரம் மாமல்லன் நகர், கே.டி.எஸ். மணி தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மகன் ராஜா. காஞ்சிபுரத்தில் ஏ பிளஸ் ரவுடியாக வலம் வந்துள்ளார். சரித்திர பதிவேட்டு குற்றவாளியான ராஜா மீது காஞ்சி, சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர், தாதா ஸ்ரீதர் நண்பரான தியாகுவுக்கு வலது கரமாக செயல்பட்டு வந்ததாகவும், தொழிலதிபர்கள் முதல் வியாபாரிகள் வரை பலரிடமும் வசூல்வேட்டை செய்து வந்ததால் இவர் வசூல் ராஜா என்று அழைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இவர் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக விளையாட்டு அணி செயலாளராகவும் இருந்து வந்துள்ளார்.
இவர் சில மாதங்களுக்கு முன் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் காஞ்சிபுரம் திருக்காளிமேடு ஈஸ்வரன் கோயில் அருகில் உள்ள ரேஷன் கடை அருகே நேற்று மதியம் 1.30 மணியளவில் நின்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்களால் நாட்டு வெடிகுண்டு வீசியும் கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் காஞ்சிபுர மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மேற்பார்வையில் காஞ்சிபுரம் எஸ்.பி சண்முகம் தலைமையிலான போலீசார் கொலையாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். முதலில் கொலை நடந்த இடத்தின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில், கொலை செய்தவர்கள் அங்குள்ள தெருக்கள் வழியாக தப்பி ஓடுவது பதிவாகியிருந்தது. இதைவைத்து இன்று (மார்ச் 12) திலீப், சிவா, சுரேஷ் சூர்யா,பரத் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் மூன்று பேர் கல்லூரி மாணவர்கள் என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
வசூல் ராஜா, குற்றச்செயல்களுக்கு நாட்டு வெடிகுண்டை கையாள்பவர் என்று கூறப்படும் நிலையில், அவரது பாணியிலேயே இந்த கொலையும் நடந்திருக்கிறது.
கைதானவர்களிடம் குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் நாட்டு வெடிகுண்டு எப்படி வந்தது? கொலைக்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். murder of rowdy Vasool Raja