நகர, மாநகர சபை கூட்டங்கள்: முதல்வர் பங்கேற்காதது ஏன்?
கிராம சபை கூட்டத்தை போன்று முதல்முறையாக இன்று(நவம்பர் 1)தமிழகத்தில் நகர சபை, மாநகர சபை கூட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் கிராமசபை கூட்டம் ஒவ்வொரு பஞ்சாயத்துகளில் நடைபெறுவது வழக்கம். இதே போல நகர்புற அமைப்புகளிலும் நடத்தபடவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், நகர்புற நிர்வாகத்தில் மக்கள் பணியினை விரிவுபடுத்தும் விதமாக வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைக்கப்படும் என்றும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் கமிட்டி, சபை அமைப்பதற்கான வழிகாட்டுதல் அரசிதழில் வெளியிடப்பட்டது.
அதன்படி உள்ளாட்சி தினமான நவம்பர் 1 ஆம் தேதி நகர்புற கூட்டங்கள் நடக்கும் என்று அரசு அறிவித்தது.
இதற்காக நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு நிறை குறை தகவலை தெரிவிக்க 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பம்மல் 6-வது வார்டில் மக்கள் குறை கேட்கும் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைப்பார் என்று தகவல் வெளியாகியது.
ஆனால் தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் அதுதொடர்பான ஆலோசனையில் முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார்.
எனவே தாம்பரம் மாநகராட்சி பம்மல் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகள் கேட்டனர்.
ஆவடி மாநகராட்சி சார்பில் தனியார் மண்டபத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் பங்கேற்று நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகள் கேட்டனர்.
ஆவடி அருகே அயப்பாக்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டார்.
கோவையில், ராமநாதபுரம் பகுதி 63 வது வார்டில் நடைபெறும் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் பங்கேற்றார்.
கூட்டத்தில் மேயர் கல்பனா, கலெக்டர் சமீரன், கமிஷ்னர் பிரதாப் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு மக்களின் குறைகளைக் கேட்டனர்.
இதேபோன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் நகர, மாநகர சபை கூட்டங்களில் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
கலை.ரா
எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்: விபத்தில் சிக்கிய ரம்பா