முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதால் கேரள முல்லைப் பெரியாற்று கரையோர பகுதி மக்களுக்கு தமிழக பொதுப்பணி துறையினர் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக – கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்து உள்ளது. 1895ல் கர்னல் பென்னிகுக் என்ற ஆங்கிலேயப் பொறியாளரால் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையின் முழு கொள்ளளவு 10.5 டிஎம்சி (1 டிஎம்சி 100 கோடி கன அடி). இந்த அணை கடல் மட்டத்திலிருந்து 881 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் முழு நீர்மட்டம் என்பது 152 அடியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், 155 கன அடி வரை முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்க முடியும். இருமாநிலங்களுக்கும் பொதுவானதாக இருக்கும் இந்த அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களின் விவசாய பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
கடந்த வாரங்களில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து குறைவாக இருந்தது. தற்போது நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 1687.50 கன அடிக்கு மேல் வருகிறது.
இதனால் அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் இருப்பு நீர் 7,666 மில்லியன் கன அடியாக உள்ளது. மேலும் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 750 கன அடி ஆகும்.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே உள்ளது. இதன் காரணமாக கேரள மாநில முல்லைப் பெரியாறு கரையோர பகுதிகளான இடுக்கி மாவட்டத்தில் உள்ள வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, ஐயப்பன் கோவில், சம்பாத்துக்கடவு, உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழக அரசு பொதுப்பணித்துறையினர் சார்பில் இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கலை.ரா
சிறுமி டானியாவுக்கு மீண்டும் சிகிச்சை: போனில் தைரியம் சொன்ன முதல்வர்!