சப்பாத்தி, பரோட்டோ போன்றவற்றுக்கு என்ன சைடிஷ் செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த முளைகட்டிய பயறு சப்ஜி. வைட்டமின் சி, கே மற்றும் தாது உப்புக்கள் நிறைந்த இந்த சப்ஜி அனைவருக்கும் ஏற்றது. சத்தானது மட்டுமல்ல… ஆரோக்கியமானதும்கூட. பூரி, பிரெட், தோசை, இட்லி என எந்த டிபனுக்கும் சைடிஷ்ஷாகப் பயன்படுத்தலாம்.
என்ன தேவை?
ஏதேனும் ஒரு முளைகட்டிய பயறு – 200 கிராம் (பாக்கெட்டுகளாகக் கடைகளில் கிடைக்கிறது)
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
தனியா (மல்லி) தூள் – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – கைப்பிடி
சீரகம் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். முளைகட்டிய பாசிப்பயறு, கொண்டைக் கடலை எதுவாக இருந்தாலும் நன்றாகக் கழுவிவிட்டு, குக்கரில் பயறு, நறுக்கிய தக்காளி, வெங்காயம், தனியா தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, மூடிவைத்து, வெயிட் போடவும். இரண்டு விசில் வந்ததும், அடுப்பை அணைத்து விடலாம். பிறகு, பிரஷர் போனதும், மூடியைத் திறக்கவும். இன்னோர் அடுப்பில், ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டுப் பொரிய விட்டு, அடுப்பை அணைத்துவிடவும். அதோடு கொத்தமல்லியையும் சேர்த்து, குக்கரில் இருக்கும் சப்ஜியில் கொட்டவும். நன்கு கிளறிவிட்டு உபயோகப்படுத்தவும்.
குறிப்பு: இந்த சப்ஜியையே, நீங்கள் கடையில் சமோசாவோடு வாங்கிச் சாப்பிடும் சுண்டலாகவும் மாற்றலாம். இதே செய்முறைதான். கடைசியாகத் தாளித்துக் கொட்டிய பிறகு, 3 ஸ்பூன் கடலை மாவைத் தண்ணீரில் கரைத்து, சப்ஜியில் ஊற்றி, ஒரு கொதி கொதிக்கவிட்டு, அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து இறக்க வேண்டும். சமோசா அல்லது பூரியைப் பிய்த்துப் போட்டுச் சாப்பிடலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்
சண்டே ஸ்பெஷல்: நிறைய தண்ணீர் குடிப்பதும் ஆபத்தா?
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் கோதுமை தோசை