2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி இலங்கையில் உள்ள தேவாலயங்கள் அனைத்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. ஈஸ்டர் தினம் என்பதால் ஏராளமான கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் நடத்தப்பட்ட சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்க குழுமியிருந்தனர்.
காலை 8: 25 மணிக்கு தலைநகர் கொழும்புவில் உள்ள புனித அந்தோணி தேவாலயத்தில் தொடங்கிய குண்டு சத்தம் மதியம் 2.15 வரை ஓயவில்லை.
குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறின. 3 தேவாலயங்கள் 3 சொகுசு ஓட்டல்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில், 269 பேர் வரை கொல்லப்பட்டனர்.
தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட 8 பயங்கரவாதிகளும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை இலங்கை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்தன.
அதே நேரத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை பாராட்டி ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி பேசிய வீடியோவும் வெளியானது.
இந்த தீவிரவாத தாக்குதலை மூளையாக இருந்து செயல்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமி அடுத்த சில நாட்களிலேயே கொல்லப்பட்டார்.
இந்நிலையில், 2019-ம் ஆண்டு ஜஹ்ரான் ஹாஸிமியுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் பேரின் இந்தியாவில் அசாருதீன் என்பவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
அதே நேரத்தில், தற்போது கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த முபினையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்து விசாரித்துள்ளனர். ஆனால் அப்போது அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் கிடைக்காததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
ஆனாலும். தொடர்ந்து முபினை கண்காணிக்குமாறு கோவை காவல்துறைக்கு மாநில உளவுத்துறை அறிவுறுத்தியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது தடைவிதிக்கப்பட்ட நிலையில், இந்து அமைப்புகளின் தலைவர்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்த வாய்ப்பிருப்பதாக அக்டோபர் 18-ம் தேதி உள்துறை அமைச்சகம் மாநில அரசை எச்சரித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது மட்டும் அல்லாமல் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ள முக்கிய தலைவர்களின் பாதுகாப்பை அதிகப்படுத்தவும், தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முபீன் குறித்து வெளியாகும் அடுத்தடுத்த பகீர் தகவல்களால் இந்த வழக்கு விரைவில் என்.ஐ.ஏ. கைவசம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்துல் ராஃபிக்
T20WorldCup 2022 : “மீண்டு வந்த விராட் கோலி” – பாபர் அசாம்
கோவை சம்பவம் : கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 14 நாட்கள் சிறை!