விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்ற முக்கியமான அம்சங்களில் ஒன்று கோல்டன் ஹவர். இந்த கோல்டன் ஹவர் நேரத்துக்குள் மருத்துவமனைக்கு செல்ல ‘ஸ்மார்ட் ஆம்புலன்ஸ்’ திட்டத்தை சென்னை காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுடன் இணைந்து ‘கோல்டன் ஹவர்’ சவாலை சமாளிக்க mSiren ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் என்ற புதிய திட்டத்தை சென்னை பெருநகர காவல் போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் கபில் குமார் சி சரத்கர் நேற்று (ஜூன் 28) சேத்துப்பட்டு, பூந்தமல்லி சாலை, ஈகா சிக்னல் அருகே தொடங்கி வைத்தார்.
இதனால், கோல்டன் ஹவர் சவாலை எதிர்கொள்ளும் அவசரகால ஆம்புலன்ஸ்களுக்கு ‘கிரீன் காரிடாரை’ செயல்படுத்த தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
mSiren என்பது வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்புகளின் தொகுப்பாகும். இது கோல்டன் ஹவரில் நேரத்தைச் சேமிக்க உதவுகிறது.
mSiren ஆனது ஸ்மார்ட் சைரன் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ‘கிரீன் காரிடார்’ நெட்வொர்க்கை உருவாக்குகிறது.
mSiren இயங்குதளமானது தகவல்களை Transmitter மற்றும் Receiver கொண்டு செயல்படுகிறது. ஆம்புலன்ஸில் இருக்கும் சைரன்களுக்கு ஸ்மார்ட் சைரன் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் சைரன் இயக்கப்படும்போதெல்லாம் இது ஒரு தகவலை Transmitter மூலம் வெளிப்படுத்துகிறது.
போக்குவரத்து சந்திப்புகளில் mSiren Receiver என்ற சாதனம் தற்போதுள்ள போக்குவரத்து சந்திப்புகளில் உள்ள LED போர்டுகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்துச் சந்திப்பில் இருந்து 200 மீட்டருக்குள் இந்த அவசரகால ஆம்புலன்ஸ் வரும்போதெல்லாம், சந்திப்பில் உள்ள mSiren அமைப்பு நிகழ்நேரத்தில் செயல்படுத்தப்பட்டு, LED போர்டில் ஆம்புலன்ஸ் உள்வரும் திசையைக் காண்பிப்பதன் மூலம் ஒலிப்பெருக்கியில் எச்சரிக்கை செய்வதன் மூலமும், பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர்களும், வாகன ஓட்டிகளுக்கும் எளிதில் தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் செயல்பட உதவும்.
இதனால் வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ்களுக்கு உடனடியாக வழிவிடுவார்கள். இதன் மூலம் ஆம்புலன்ஸ் விரைவாக குறிப்பிட்ட மருத்துவமனைக்குச் செல்வதற்கும், ஆபத்தில் இருக்கும் உயிரைக் காப்பாற்றுவதற்கும் பெரிதும் உதவும்.
தற்போது காவேரி, ரேலா மற்றும் குளோபல் ஆகிய மூன்று தனியார் மருத்துவ மனைகளில் 25 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 16 போக்குவரத்து சந்திப்புகளில் இச்சேவை இணைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள 40 சந்திப்புகளுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம் திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக சென்னை போக்குவரத்து காவல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் சேவையைப் பெற தனி தொடர்பு எண் எதுவும் இல்லை. ஏற்கனவே உள்ள அவசர உதவி எண்களை பயன்படுத்தி இந்தச் சேவையைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
ரேஷனில் அரிசிக்கு பதில் பணம்: தமிழக பாஜகவினர் எதிர்ப்பு!
எச்-1B விசா வைத்திருப்பவர்களுக்கு கனடாவில் பணிபுரிய வாய்ப்பு!