தீபாவளிக்கு வந்த மொத்த ஸ்வீட்டையும் காலி செய்தாச்சு. இன்னிக்கும் பண்டிகை விடுமுறைதான்… என்ன செய்யலாம்’ என்று நினைப்பவர்கள், எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த மோத்தி லட்டை செய்து அசத்தலாம்.
என்ன தேவை?
கடலை மாவு – ஒரு கப்
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை
தண்ணீர் – தேவையான அளவு
நெய், எண்ணெய் – தேவையான அளவு
பாகு செய்ய…
சர்க்கரை – முக்கால் கப்
தண்ணீர் – ஒரு கப்
ரோஸ் வாட்டர் – 2 டேபிள்ஸ்பூன்
வெள்ளரி விதை – 2 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
கடலை மாவுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, கட்டியில்லாமல் பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். இதனுடன் கேசரி பவுடர் சேர்த்துக் கலக்கவும்.
வாணலியில் நெய், எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றிக் காயவைக்கவும். எண்ணெய்க்கு நேராக பூந்திக் கரண்டியை வைத்து மாவை ஊற்றி, அதன் கைப்பிடியை நன்கு தட்டவும். பூந்திகள் எண்ணெயில் விழுந்து ஓசை அடங்கி மிதக்க ஆரம்பிக்கும்போது எடுத்து வடியவிடவும்.
சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து, பிசுக்குப் பதத்துக்குப் பாகு வரும் வரை காய்ச்சவும். இதனுடன் ரோஸ் வாட்டரைச் சேர்க்கவும். அடுப்பைச் சிறுதீயில் வைத்து பூந்திகளைச் சேர்த்துக் கிளறவும். பூந்தி சர்க்கரையுடன் சேர்ந்து நன்கு சுருண்டு வரும்போது கையைத் தண்ணீரில் நனைத்துக் கொஞ்சம் பூந்திகளை எடுத்துப் பிடித்துப் பார்க்கவும்.
லட்டு போல் பிடிக்கவந்தால் அதுதான் சரியான பதம். உடனே இறக்கி, வெள்ளரி விதை சேர்த்துக் கிளறி மூடி ஆறவிடவும். கைபொறுக்கும் சூடு வந்ததும் லட்டுகளாகப் பிடிக்கவும். நான்கு அல்லது ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ்… ’கேப்டன்’களை அகற்றிய அணிகள் : காரணம் என்ன?