தாய், மகன், 10 வயது பேரன் ஆகிய மூவரை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு மறுநாள் இரவு ஆசிட் ஊற்றி எரித்த சம்பவம் கடலூரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க பல விதமான கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் கடலூர் பண்ருட்டி சாலை நெல்லிக்குப்பம் ராஜாராம் நகரில் பத்து வருடங்களாக வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சுரேஷ்குமார். ஈஐடி பாரி கம்பெனியின் மருத்துவமனையில் மருந்தாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு கமலேஷ்வரி (60) என்ற மனைவியும், சுரேந்திர குமார் (43), சுதன்குமார் (40) என இரண்டு மகன்களும் உள்ளனர்.
மகன்கள் இருவரும் ஆந்திர மாநிலத்தில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தனர். இதில் மூத்த மகன் சுரேந்திரகுமாருக்கு 10 வயதில் நிஷாந்த் என்ற மகன் உள்ளார்.
சுரேந்திரகுமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி மூன்று மாதத்தில் பிரிந்துவிட்டார்.
அதன்பின்னர் பெங்களூர் ஐடி கம்பெனியில் வேலை செய்தபோது இஸ்லாமிய பெண்ணுடன் சுரேந்திரகுமாருக்கு காதல் ஏற்பட்டது. இவர்களுக்கு பிறந்த குழந்தை தான் நிஷாந்த். குழந்தை பிறந்ததும் இருவரும் பிரிந்து விட்டனர்.
இதற்கிடையே சுரேந்திரகுமாரின் தந்தை சுரேஷ்குமார் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.
இதனையடுத்து சமீபத்தில் ஆந்திராவில் இருந்து தனது 10 வயது மகன் நிஷாந்துடன் நெல்லிக்குப்பத்திற்கு வந்த மூத்த மகன் சுரேந்திர குமார், தாயார் கமலேஷ்வரியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். நிஷாந்த் அருகிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 15 ஆம் தேதி காலையில் சுரேந்திரகுமார் வீட்டில் இருந்து புகை வருவதாகவும், போர்டிகோ பகுதியில் ரத்தம் உறைந்து போய் கிடப்பதாகவும் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு அக்கம்பத்தினர் தகவல் அளித்தனர்.
அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் பார்த்தபோது, வீட்டு போர்ட்டிகோவில் நிறுத்தி இருந்த கார் கதவு அருகில் கமலேஸ்வரி வெட்டு காயங்களுடன் எரிந்த நிலையில் கிடந்துள்ளார்.
இன்னொரு அறையில் சுரேந்திரகுமார் தலை, கழுத்து, உடம்பில் வெட்டுப்பட்டு இறந்த நிலையில் எரிந்து கிடந்துள்ளார்.
மற்றொரு அறையில் 10 வயது சிறுவன் வெட்டு காயங்கள் இல்லாமல் இறந்து கிடந்துள்ளான்.
மேலும் போர்ட்டிகோவில் கடந்த 14 மற்றும் 15ஆம் தேதிகளில் போடப்பட்ட செய்தித்தாள் அப்படியே கிடந்துள்ளது.
இதனையடுத்து மூன்று உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடந்துள்ளது தெரியவந்தது.
அதாவது, சனிக்கிழமை ஜூலை 13 ஆம் தேதி கொலை சம்பவம் நடந்திருக்கலாம், மறுநாள் ஞாயிறு இரவு ஜூலை 14 ஆம் தேதி மீண்டும் கொலை நடந்த வீட்டிற்கு வந்து ஆசிட் ஊற்றிவிட்டு சென்றுள்ளனர் என்ற முடிவுக்கு வந்தனர் விசாரணை அதிகாரிகள்.
அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் கிடையாது. அடர்த்தியான வீடுகளும் இல்லை. அதனால் விசாரணையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது.
எனினும் எஸ் பி ராஜாராம் தலைமையில் சிறப்பு டீம் மற்றும் 7 தனிப்படை அமைக்கப்பட்டு காலதாமதம் ஏற்பட்டு விடாமல் விசாரணை தொடர்ந்து வருகிறது.
போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர்கள் அணிந்திருந்த தங்க செயின், மோதிரம் எடுக்க வில்லை, பீரோவில் இருந்த பணம் பொருளும் எடுக்கவில்லை, நான்கு செல்போன்கள் இருந்த இடத்திலேயே இருந்தன. அதனால் இது ஆதாய கொலை அல்ல என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே கொலையில் முன் பகை இருக்குமா என முதல் மற்றும் இரண்டாம் மனைவி (நிஷாந்த் அம்மா) இரு தரப்பிலும் விசாரித்தும் துப்புக் கிடைக்கவில்லை.
கடைசியாக உள்ளூரில் பெண் தொடர்பால் பகை இருக்குமா என்று அவரது செல்போன் தொடர்புகளை கொண்டு பார்த்ததில், அதே பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினரிடம் விசாரித்து வருகிறது ஸ்பெஷல் டீம். அந்த வீட்டில் படிந்திருந்த ரத்த கறையை எடுத்து டெஸ்ட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் சுரேந்திரகுமார் வசித்து வந்த நெல்லிக்குப்பம் ராஜாராம் நகரைச் சேர்ந்த இளைஞரை சென்னையிலும், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விரைவில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்துவிடுவோம் என்று எஸ்.பி.ராஜாராம் உறுதியுடன் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
‘கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது’ : சசிகலாவை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்
வேட்டி அணிந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு… மால்-ஐ மூட உத்தரவு!