வீட்டில் இறப்பு ஏற்பட்டால் கடனை திருப்பி கேட்க மாட்டார்கள்… மகளை கொன்ற தாய்!

Published On:

| By Kumaresan M

அமாவாசைக்குள் கடனை அடைப்பதாக கடன்காரர்களிடம் கூறிய நிலையில், வீட்டில் மரணம் நிகழ்ந்தால் கடனை கேட்க மாட்டார்கள் என்று கருதி  பெற்ற மகளையே தாய் கொன்ற அதிர்ச்சி சம்பவம் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை என்ற  கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ்- சத்யா தம்பதிக்கு 13 வயதில் ஆதவன் என்ற மகனும், அக்ஷயா, அதிசயா என்ற 2 மகள்களும் உள்ளனர். அதிசயா இரு தினங்களுக்கு முன்பு காலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அதிசயாவைக் காணவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும்  கண்டுபிடிக்க முடியவில்லை.

தொடர்ந்து, தந்தை பிரகாஷ் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன சிறுமியை தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து கிராமத்தில் உள்ள கிணறுகள், ஏரிகள், குளங்களில் தீவிரமாக தேடி வந்தனர். ஒரு கட்டத்தில் அதிசயாவின் தந்தை பிரகாஷ் மற்றும் தாய் சத்யாவிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது சத்யா மகளை அழைத்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனால்,  சத்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது,​​மகளை கிணற்றில் வீசி கொன்றதை ஒப்புக்கொண்டார். விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.

சத்யா​​ அதே ஊரில் பல்வேறு நபர்களிடம் ரூ.4 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கியது பற்றி அவரது கணவருக்கும், குடும்பத்தினருக்கும் தெரியாது.

வரும் அமாவாசைக்குள்  கடனைத் திருப்பி அடைப்பதாக கூறியுள்ளார். கடன் வாங்கியவர்களிடம் கூறிய காலக்கெடு முடிவடையும் நேரத்தில் குழந்தையை கொன்றால், கடன் கொடுத்தவர்கள் அனுதாபப்பட்டு, கடனை கேட்காமல்  விட்டு  விடுவார்கள் என்று சத்யா  கருதியுள்ளார்.

இதையடுத்து, தனது மகளை அழைத்து சென்று  சாலையோர கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். தற்போது,  சத்யாவைக் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

-எம்.குமரேசன் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹிண்டன்பர்க் இம்பேக்ட்… தொடர் சரிவில் பங்குச்சந்தை!

சவரனுக்கு ரூ.760 உயர்ந்த தங்கம் விலை… நகைப்பிரியர்கள் ஷாக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel