சென்னை பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் மீண்டும் இன்று (மே 31) தீ பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.
பெரும்பாக்கம் சதுப்பு நிலம்:
சென்னை சோழிங்கநல்லூரில் ஆவின் பால் பண்ணையின் பின்புறம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியாக பெரும்பாக்கம் சதுப்புநிலம் உள்ளது.
இந்த சதுப்பு நில பகுதியில் நேற்று இரவு திடீரென பயங்கரமாக தீ பற்றி எரிந்தது. தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் சதுப்பு நிலத்தில் இருந்த புற்கள், செடிகள், மரங்கள் எல்லாம் தீயில் கருகின.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், செடி, மரங்கள் காய்ந்து இருந்ததால் தீ பற்றியதாக கூறப்படுகீறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட பகுதி சதுப்பு நிலம் என்பதால், வாகனங்களை உள்ளே எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து, இரவு முழுவதும் தீயணைப்பு வீரர்கள் போராடி இன்று அதிகாலை 4 மணிக்கு தீயை அணைத்தனர். ஆனால், தற்போது மீண்டும் தீ பற்றி எரிய தொடங்கி உள்ளது.
தொடர்ந்து, வாகனங்கள் உள்ளே எடுத்து செல்ல முடியாததால், தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தீயணைப்பு வீரர்கள் உள்ளே நடந்து சென்று செடி, இலைகளை வைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தீ பரவுவதை உடனடியாக நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மே 31) வலியுறுத்தி உள்ளார்.
சீமான் வலியுறுத்தல்
சீமான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பள்ளிக்கரணை (பெரும்பாக்கம்) சதுப்பு நிலப்பகுதியில் நேற்று (மே 30) ஏற்பட்ட காட்டுத்தீ முழுவதுமாக அணைக்கபட்டதை உறுதி செய்வதோடு பொதுமக்களையும், சூழலியலையும் பாதுகாத்திட துரித நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.
சதுப்புநிலப் பகுதிகளும், பறவைகளின் உறைவிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வரும் நிலையில், இக்காட்டுத்தீயிற்கானக் காரணிகளைக் கண்டறிய வலியுறுத்துகிறேன்.
குப்பை மேட்டின் தன்மை போன்ற மானுடவியல் காரணிகளாக இருப்பின் போர்க்கால அடிப்படையில் அரசு எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று பொதுமக்கள் உற்று நோக்க வேண்டுகிறேன்.
பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் மற்றும் அருகாமையில் இருக்கக்கூடியக் குப்பைக்கிடங்கிலிருந்து வெளியேறும் வேதிமப்பொருட்கள் ஆகியவற்றால் ஏற்படும் சூழலியல் சீர்கேடுகள் குறித்துத் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது இந்தக் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
இழந்த சதுப்புநிலப் பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் காலம் கடத்தாமலும், ஊழலின்றியும் அரசு ஈடுபட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் தாய்பால் விற்பனை: கடைக்கு சீல்!
கமலுடன் த்ரிஷா… வைரலாகும் ’தக் லைஃப்’ போட்டோ!