தனியார்வசம் செல்லும் காலை உணவு திட்டம்?: ஊழியர்கள் போராட்டம்!

Published On:

| By christopher

காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து சத்துணவு ஊழியர்கள் இன்று (மே 3) தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஒன்றிய அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வரும் ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள  மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு, ஜூன் 1 ஆம் தேதி முதல் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அதற்கான சமையல் செய்யும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளதை அறிந்த சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் இன்று (மே 3) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். 

இது குறித்து சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சந்திரசேகரிடம் மின்னம்பலம். காம் சார்பாக பேசினோம். 

morning breakfast scheme is going to private
சந்திரசேகர் (இடது)

அவரிடம், “முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்?” என கேட்டோம். 

அதற்கு அவர், “தமிழகத்தில் ஏற்கனவே சுமார் 42 ஆயிரம் சத்துணவு மையங்களும், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஊழியர்களும் இருந்தார்கள். அதில் படிப்படியாக 8 ஆயிரம் மையங்கள் மூடப்பட்டன. 2016ஆம் ஆண்டில் இருந்து 40 ஆயிரம் காலி பணியிடங்கள் இதுவரையில் நிரப்பாமல் இருந்து வருகிறது. ஆண்ட கட்சியும், ஆளுங்கட்சியும்.

தற்போது 32 ஆயிரம் மையங்களும், சுமார் 75 ஆயிரம் ஊழியர்களும் இருக்கிறார்கள். சத்துணவு மையங்களில் அனைத்து விதமான கட்டுமானங்களும் இருக்கும்போது, காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதில் முதல்வருக்கு உள்நோக்கம் உள்ளது” என்றார். 

தொடர்ந்து அவரிடம், ”சிறப்பாக செயல்பட்டுவரும் முதல்வருக்கு அப்படி என்ன உள்நோக்கம் இருக்கபோகுது?” என்று கேட்டோம். 

அப்போது அவர், “ஏற்கனவே உள்ள 40 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பவில்லை. இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு இல்லை. பல சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இப்படி படிப்படியாக ஆட்களை குறைத்து மையங்களையும் மூடிவிட்டு ஒட்டுமொத்த சத்துணவு திட்டத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கும் முன்னோட்டமாக தான் காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பது உள்ளது. இதனை அரசு திரும்ப பெற வேண்டும்.” என்றார். 

வணங்காமுடி

ஆதிக்கம் செலுத்திய சென்னை: தப்பி பிழைத்த லக்னோ!

மனோபாலா மறைவு: நடிகர் விஜய் நேரில் அஞ்சலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share