தொடர் விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய இரண்டு நாட்களில் சென்னையிலிருந்து 3,12,345 பேர் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
அக்டோபர் 4, 5 ஆம் தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அக்டோபர் 1, 2 ஆம் தேதிகள் வார இறுதி நாட்கள்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை என்பதால் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக சென்னையில் தங்கியிருக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.
இதனால் பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தடுப்பதற்காகவும் ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்படும் அதிக பேருந்து கட்டணம் மக்களைப் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துத் துறை வழக்கம் போல் இயங்கும் பேருந்துகளோடு சேர்த்து சிறப்புப் பேருந்துகளையும் இயக்கி வருகிறது.
இதன்மூலம், மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் நிம்மதியாகச் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர்.
சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால், செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய இரண்டு நாட்களில் சென்னையிலிருந்து 3,12,345 பேர் அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக போக்குவரத்துத் துறை இன்று (அக்டோபர் 2) தெரிவித்துள்ளது.
இதில் செப்டம்பர் 30 ஆம் தேதி மட்டும் 1.62 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
மோனிஷா
அதிகாரிகளிடம் கோபப்பட்ட தலைமைச் செயலாளர் இறையன்பு: ஏன்?
கல்லணையில் 1000 பேர் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி!