தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் நியாய விலைக் கடைகளில், குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைப்பக்கம் போகாமலே அரிசி பருப்பு சர்க்கரை போன்ற பொருட்கள் வாங்கியதாக பயனாளிகளுக்கு மெசேஜ் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் வானிப கழகம், மகளிர் சுய உதவிக் குழு என 34 ஆயிரம் நியாய விலைக் கடைகளில் 21 ஆயிரம் பணியாளர்கள் மூலம் 2 கோடியே 24 லட்சத்து 21 ஆயிரம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மானிய விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, ரவை, பாமாயில் என பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மக்கள் நலன் கருதி ரேஷன் கடைகள் மூலமாக வழங்கும் பொருட்கள் வெளியில் கொள்ளைப்போவதை தவிர்க்க டிஜிட்டல் முறையை அமல்படுத்தியது அரசு.
எனினும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கை ரேகை வைக்க வேண்டும், ஸ்மார்ட் கார்டை ஸ்கேன் செய்யவேண்டும் என இப்படி டிஜிட்டல் முறைகள் பல இருந்தாலும், அதையும் மீறி ரேஷன் பொருட்களை கடை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை கொள்ளை அடித்து தான் வருகின்றனர்.
வாங்கியதாக வந்த மெசேஜ்!
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம் விளம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிரீஷ்ணாவேனி. இவர் தான் ரேஷனில் வாங்காத பொருட்கள் வாங்கியதாக தனக்கு மெசேஜ் வந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், “எனது குடும்ப அட்டை விளம்பூர் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடைக்கு உட்பட்டது. கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி, நியாய விலைக் கடையில் நான் சர்க்கரை 1 கிலோ, பச்சை அரிசி 6 கிலோ, பருப்பு 1 கிலோ, இலவச அரிசி 10 கிலோ வாங்கி இருப்பதாக மெசேஜ் வந்தது.
உடனே இதுகுறித்து விசாரிக்க நியாய விலைக் கடைக்கு நேரடியாக சென்றேன். ஆனால் கடை மூடியிருந்தது. அங்கிருந்த கடை ஊழியரிடம் விசாரித்தால், இன்று கடை விடுமுறை என்று தெரிவிக்கிறார். ஒன்றும் புரியவில்லை” என்கிறார்
கிரீஷ்ணாவேனியின் குற்றச்சாட்டுகள் போல் நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், போன்ற மாவட்டங்களிலும் இதே பிரச்சனைகள் நடப்பதாக சொல்கிறார்கள் நியாய விலைக் கடை ஊழியர்கள்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நியாய விலைக் கடை ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயசந்திரன் ராஜாவிடம் கேட்டோம்.
“எப்படி இப்படி தவறு நடக்கின்றது என்று தெரியவில்லை, இதுபோன்ற தவறுகளைத் தடுக்க வேண்டும் என்று சில மாவட்டங்களில் கலெக்டர் மீட்டிங்கிலும் பேசியுள்ளனர்” என்றார்.
நியாய விலைக் கடையின் சீனியர் சேல்ஸ் மேன் ஒருவரிடம் கேட்டபோது, ”தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்கள் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகளை லிஸ்ட் எடுத்து, அந்த கார்டுகளில் பொருட்கள் வாங்கியதாக என்ட்ரி செய்து வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்” என்றார்.
இப்படி நியாய விலைக் கடைகளில் கொள்ளை நடப்பது பற்றி தகவல் கேட்க கூட்டுறவுத்துறை பதிவாளர் சுப்பையன் மற்றும் கூடுதல் துணை பதிவாளர் காயத்ரி கிருஷ்ணனைத் தொடர்ந்து தொடர்புகொள்ள முயற்சித்தோம். ஆனால் இரண்டு அதிகாரிகளும் கைப்பேசி அழைப்பை துண்டித்தனர்.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கை ரேகை வைக்க வேண்டும், ஸ்மார்ட் கார்டை ஸ்கேன் செய்யவேண்டும் என பல டிஜிட்டல் முறைகள் உள்ள நிலையில், அதையும் மீறி நடந்து வரும் இந்த நவீன கொள்ளை பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எதிர் அணி வீரரை கடித்து வைத்த உருகுவே சவுரஸ்… கால்பந்து விளையாட்டுக்கு முழுக்கு!